Breaking News

புத்தளம் - மன்னார் (B-379) வீதியை மீளத் திறக்கக் கோரி ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் நிகழ்வு கற்பிட்டியிலும் ஆரம்பம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எலுவன்குளம் மற்றும் மரிச்சிகட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார்: (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மாபெரும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


 நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள புத்தளம் - மன்னார் பழைய வீதியை மீளத் திறக்க வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இக் கையொப்ப போராட்டம் நான்கு மாவட்டங்களில் ஒருங்கிணைந்து முன்னெடுப்படுவதாக

புத்தளம் - மன்னார் பாதை மீட்புக்கான மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இந்த பாரிய கையொப்பத் திரட்டல், புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமை (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.


சர்வமதத் தலங்களில் ஒன்றிணைந்து  மக்களால் மேற்கொள்ளப்படும் இந் நிகழ்வு இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், இந்தப் பாதையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், நான்கு மாவட்டங்களிலும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகிய மத வழிபாட்டுத் தளங்களில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற உள்ளது.


முதல் நாளிலேயே, இப்பாதை திறக்கப்பட வேண்டும் என்ற மக்களின் ஆவல், பெரும் திரளான பங்கேற்பாக வெளிப்பட்டதுடன், பல ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வரும் போக்குவரத்துத் துயரத்தின் பிரதிபலிப்பாக இந்த ஆதரவு அமைந்ததுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் 


இது தொடர்பாக "புத்தளம் - மன்னார் பாதை மீட்புக்கான மக்கள் ஒன்றியத்தின்" பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,


*"இந் வீதி  மக்களின் உயிர்நாடியாகும். யுத்தத்திற்கு முன்னர் தடையின்றி இயங்கிய இந்த வீதி, இன்று மூடப்பட்டுள்ளதால் மக்கள் 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி, சுகாதாரம், வணிகம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 


யுத்தத்தால் ஏற்கனவே 50 ஆண்டுகள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள வட மாகாணத்தின் பொருளாதார மைல்கல்லாக அமைய வேண்டிய இந்த வீதி, ஏனைய தேசியப் பூங்காக்கள் ஊடாக பிரதான வீதிகள் இயங்கும் நிலையில், வில்பத்து ஊடான இந்த வீதிக்கு மட்டும் தடை விதிப்பது பாரபட்சமான நடவடிக்கையாகும். 


ஒரு இலட்சம் மக்களின் உணர்வுப்பூர்வமான கையொப்பங்களை ஒன்றிணைத்து, ஜனாதிபதி அவர்களிடம் நேரில் கையளித்து, நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம்"" என தெரிவிக்கின்றனர் 


புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டிருப்பதன் காரணமாக, வடமேற்கு மற்றும் வட மாகாண மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்


வணிகம், கல்வி, சுகாதாரம், மீன்வளம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாதை மூடப்பட்டிருப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.


தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்டவும், பிராந்தியத்தின் பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தவும் அணிதிரளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


"உங்கள் உரிமைக்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு கையெழுத்திட்டுச் செல்லுங்கள்!" 


என மக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


வில்பத்து தேசியப் பூங்காவின் சூழலியல் பாதுகாப்பை பேணிக்கொண்டு, நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான "Green Corridor" முறை மூலம் இந்தப் பாதையை மீளத் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சூழலியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில், இந்த மக்கள் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்து, விரைவான அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பார் என நான்கு மாவட்ட மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.











No comments