கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆலங்குடா மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவுகளின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் தாக்கப்பட்டதையும் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளையும் கண்டிக்கும் முகமாக திங்கட்கிழமை (22) கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கிராம உத்தியோகத்தர்கள், , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவின் அலுவலர்களும் ஒன்றிணைந்து சுமார் 30 நிமிடம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பாக பல்வேறு எதிர்ப்பலைகள், கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அச்சுறுத்தப்பட்டமை என்பவற்றிற்கு மத்தியில் கடமையாற்றி வந்த நிலையில் ஆலங்குடா மற்றும் நிர்மல்புர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் தாக்கப்பட்டமையை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனர்த்த நிவாரணம் தொடர்பான சகல வேலைத்திட்டங்களில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தமையும் இவர்களின் இந்த அனர்த்த நிவாரணம் பணி புறக்கணிப்பு திங்கட்கிழமை(22) தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஊடாக அரச அதிகாரிகளின் வேலைகளுக்கு இடையூறு விளைவித்தல் , அச்சுறுத்தல் விடுவது மற்றும் தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கபட்டையும் குறிப்பிடத்தக்கது.






No comments