சவூதி அரேபிய இராச்சியமும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அதன் வரலாற்று நிலைப்பாடும்
எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்
1979 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, நவம்பர் மாதம் 29 ஆம் திகதியை பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமைக்கான தினமாக பிரகடனப்படுத்தியது. இந் நாளில், நவீன வரலாற்றில் பழமையான தீர்க்கப்படாத நீதிசார் பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு பிரச்சினைக்கான அதன் தார்மீக மற்றும் மனிதாபிமான உறுதிப்பாட்டை உலக நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதற்கமைய, சவூதி அரேபியா, அதன் தலைமையின் கீழ், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை ஆதரிப்பதில் அதன் அசைக்க முடியாத நிலைப்பாட்டையும் முக்கிய பங்கையும் உறுதிப்படுத்துகிறது. 1967ம் ஆண்டில் காணப்பட்ட எல்லைகளுக்கமைய கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு தங்கள் சுதந்திர அரசை நிறுவுவதற்கான அவர்களின் உரிமை, அவற்றில் முதன்மையானதாகும்.
சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல்ரஹ்மான் ஆல் சஊத் அவர்களின் காலத்திலிருந்து பாலஸ்தீனப் பிரச்சனை சவூதியின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு மூலக்கல்லாகவும், மாறிவரும் சூழ்நிலைகள் அல்லது காலப்போக்கில் மாறாமல் நிலையானதாக இருக்கும் தேசிய ஒருமித்த கருத்துக்கான ஒரு புள்ளியாகவும் இருந்து வருகிறது. இந்த உறுதியான அணுகுமுறையைப் பின்பற்றி, பல்வேறு சர்வதேச மன்றங்களில் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதில் சவூதி அரேபியா தனது தீவிரமான இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. சர்வதேச தீர்மானங்கள் மற்றும் அரபு அமைதி முயற்சியின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு மூலம் மட்டுமே நீதியான மற்றும் விரிவான அமைதியை அடைவது சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தி வருகிறது.
இன்று, இரண்டு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் மற்றும் பிரதம மந்திரியும் பட்டத்து இளவரசருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான், ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா சர்வதேச நிலைப்பாடுகளை ஒன்றிணைத்து, பாலஸ்தீன பிரதேசங்களில் பொதுமக்களுக்கு எதிரான அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்துகிறது. சுகாதாரம், உணவு, தங்குமிடம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அவர்களின் துன்பங்களைத் தணிக்கவும் இது செயல்பட்டு வருகிறது.
மேலும், இரு நாட்டுத் தீர்வை உறுதி செய்யும், சுயாதீனமான, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் பிராந்தியத்திற்கு ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மீண்டும் கொண்டுவரும் தீவிரமான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச ஆதரவைப் பெற சவூதி அரேபியா விரிவான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா இம் முயற்சிகளை அதன் அரபு மற்றும் இஸ்லாமிய பொறுப்பின் அடிப்படையிலும், அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் நம்பகமான பங்காளியாக அதன் சர்வதேச நிலைப்பாட்டிலும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பாலஸ்தீன மக்களை ஆதரிப்பது ஒரு அரசியல் கடமை மட்டுமல்ல, பிராந்திய பாதுகாப்பை உருதிப்படுத்தவும் மத்திய கிழக்கில் மிகவும் நிலையான சூழலை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் ஒரு மனிதாபிமானப் பொறுப்பு என்றும் சவூதி அரேபியா நம்புகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சர்வதேச சட்டபூர்வமான தீர்மானங்களின்படி பாலஸ்தீன மக்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்கும் உதவும் வகையில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இராச்சியம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது.





No comments