Breaking News

புத்தளத்தின் பசுமைக் கனவு எனும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளத்தின் பசுமை கனவு எனும் புத்தளம் மாவட்ட மட்டத்தில் ஒரு  இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடர்பான ஆரம்ப  கலந்துரையாடல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளை அலுவலகத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் தலைமையில் சனிக்கிழமை (08) இடம்பெற்றது  


பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சுமார் இரண்டு வருடங்களாக, அமைதியான முறையில் தூர நோக்குடன் மேற்கொண்டு வரும் சூழல் நேய பசுமைப் புரட்சியின் அடுத்த பரிணாமம் என இக்கலந்துரையாடலைக் குறிக்க முடியும். ஏனெனில் இதில் கலந்துகொண்டோர் அவரவர் துறைகளில் சமூக சிந்தையுடனும் சிரத்தையுடனும் பங்காற்றுபவர்களாவர்.


இக்கலந்துரையாடலில் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாட் அஹ்மட்,  வீதி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர் திரு அருள்தாசன் , ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் இஸட் .ஏ சன்ஹிர்,  மற்றும் சூழலியலாளர் பதியுஸ்ஸமான் (கல்முனை) உட்பட கல்வி – விவசாயம் – சூழலியல் - பொறியியல் – சட்டம் – மருத்துவம் – இலக்கியம் – ஊடகம் என ஒரு சமூகத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு துறைகளில் துறைகண்டவர்கள் பங்குகொண்டிருந்தமை இதற்கு நிகழ் சான்று.


இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:


# புத்தளம் மாவட்டத்தில் ஓர் இலட்சம் (100,0000) மரங்களை நடுதல்.

#  வீதிகளை மரங்களினால் அழகு; நிழல் வழங்குதல்.

# சிறிய (சுமார் 2 - 3 ஏக்கர்) காணித் துண்டொன்றில் குறு வனாந்திரம் ஒன்றை அமைத்தல். அதனுடன் இணைந்ததாக பறவை சரணாலயம் ஒன்றை உருவாக்குதல்.

# முன்பள்ளிப் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் (சமய) பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் நேய மனப்பான்மையை உருவாக்கி வளர்த்தல்.

#  அனைத்து மட்ட மக்களிடத்திலும் சூழல் நேய கலாசாரத்தை ஏற்படுத்துதல்.

# அருகிப் போன - அழிந்து போன மர வகைகளை மீள வளர்த்து பாதுகாத்தல்.


புத்தளம் மாநகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் பின்வரும் விடயங்களை முன்வைத்தார்


# வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாநகரம் ‘பசுமை நகர’த் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

# புத்தளத்தின் பசுமை சூழல் தொடர்பான மூலத் திட்டம் (Master Plan) ஒன்றை தயாரித்தல்.

#  இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து (அரச/ தனியார்) நிறுவனங்களின் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்ளுதல்.


மேற்படி ஒன்றுகூடலின் இறுதியில் புத்தளம் பசுமைக் கழகம் (Puttalam Green Society( உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்தடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது






No comments