விரிவடைந்துள்ள அல்-கொய்தா இயக்கத்தின் போர்க்களம். எந்நேரமும் மாலியின் தலைநகரை கைப்பற்றலாம்.
ஆபிரிக்கா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலியில் 95 வீதமானவர்கள் இஸ்லாமியர்கள். தங்கம் உட்பட இயற்கை வளங்கள் நிறைந்த இந்த நாடு 1960 இல் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தது. ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமை, உள்நாட்டு குழப்பங்கள் காரணமாக பிந்தங்கிக் கானப்படுகின்றது.
1990 களில் வடக்கு மாலி பிராந்தியத்தில் வாழும் “துவாரெக்” இனத்தவர் தனிநாடு கோரிய போராட்டத்தை ஆரம்பித்தனர். இது சஹாரா பாலைவனத்தை அண்டிய பகுதியாகும். 2012 இல் லிபியாவில் கேணல் கடாபியின் ஆட்சி வீழ்ந்ததன் பின்பு பல ஆயுதக்குழுக்கள் மாலிக்குள் புகுந்ததுடன், அங்கு எழுச்சிகள் ஏற்பட்டு, வடக்கு மாலி முழுவதும் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டினுள் வந்தது.
இந்த நிலையில், அல்-கொய்தா இயக்கத்தின் AQIM (அல்-கொய்தா இஸ்லாமிக் மக்ரெப்), JNIM (ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன்) ஆகிய அமைப்புகள் வலுப்பெற்றன. அவை மாலியின் வடக்கு பகுதிகளை “”இஸ்லாமிய அமீரகம்”” என அறிவித்தன.
அல்-கொய்தா அமைப்புக்களை அடக்குவதற்கு பிரான்ஸ் 2013 இல் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த இராணுவ நடவடிக்கை நீடித்தபோதிலும், 2022 இல் பிரான்ஸ் தனது படைகளை வாபஸ் பெற்றது. அதன்பின்பு மாலி இராணுவ ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் வாக்னர் குழுவை (Wagner Group) அழைத்து, ரஷ்ய ஆதரவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
2023 க்கு பின்பு நிலைமை மேலும் மோசமடைந்தது. அல்-கொய்தாவின் JNIM, IS-Sahel ஆகிய ஜிஹாதி அமைப்புகள் மாலியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தி, தற்போது நாட்டின் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.
தலைநகர் Bamako வுக்கான எரிபொருள் விநியோக பாதைகளை தடுத்து, தலைநகருக்கான பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். எந்த நேரத்திலும் தலைநகர் வீழ்வதற்கான சாத்தியம் உள்ளது.
இந்நிலையில், கேணல் அஸ்சிமி கொய்தா தலைமையிலான மாலியின் இராணுவ அரசு பெயரளவில் மட்டுமே மத்திய ஆட்சியை வைத்திருக்கிறது. நாட்டின் பெரும்பகுதி “அல்-கொய்தா” சார்பு அமைப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. ஐக்கிய நாடுகள், ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் பல சர்வதேச அமைப்புகள், மாலி விரைவில் “சூடான்” போன்ற நிலைக்கு மாறலாம் என்று அபாய எச்சரிக்கை விடுத்தள்ளனர்.
அல்-கொய்தா இயக்க தலைவர் “ஒசாமா பின் லேடன்” 2011 இல் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதன் பின்பு அந்த இயக்கம் பலயீனமடைந்ததாகவே நம்பப்பட்டது. ஆனால் வெவ்வேறு பெயர்களில் உலகின் பல பாகங்களில் எழுச்சிபெற்று வருவதுடன், பெரும் நிலப்பரப்பைக் கொண்ட மாலி நாட்டை கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்துள்ளனர்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments