"உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" – கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின விழா
நூருல் ஹுதா உமர்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தொனிப்பொருளினாலான சிறுவர் தின விழா பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இன்று (01) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், உரைகள், பாடல்கள் மற்றும் நாடகங்களின் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறுவர் உரைகளில் அன்பு, நட்பு, ஒற்றுமை, கருணை போன்ற பண்புகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சிறுவர் தினத்தின் ஒரு பகுதியாக சிறுவர் விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் கல்வி, விளையாட்டு மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் கலந்து கொண்டார். விழாவில் கருத்து வெளியிட்ட அவர் தனது உரையில், சிறுவர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்பதையும், அவர்கள் அன்பு மற்றும் மனிதநேயத்துடன் வளரும் போது மட்டுமே உலகை வழிநடத்த முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.என்.எம். ஸ்வர்ணகாந்தி கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதி தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறுவர்களை வாழ்த்தி ஊக்குவித்தனர்.
No comments