தங்க முதலீடுகளில் மோசடிகள் – கானாவில் ஹிஸ்புல்லாஹ். இதனால் யாருக்கு பாதிப்பு ?
ஆபிரிக்க கண்டமானது தங்கம், வைரம், லித்தியம் போன்ற இயற்கை வளங்கல் நிறைந்து காணப்படுவதால், உலக நாடுகளிலிருந்து பல முதலீட்டாளர்கள் அங்கு குவிகின்றனர்.
ஆனால் அங்கு சட்டமுறைமையற்ற தங்கச் சுரங்கங்கள், போலி ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச மோசடிகள் மலிந்து காணப்படுகின்றது.
சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கானா நாட்டில் தங்கம் அகழ்வதற்கான ஒப்பந்தத்தில் இரண்டு மில்லியன் US$ முதலீடு செய்ததாகவும், அதில் மோசடி நடந்ததாகவும் வெளிவந்த செய்தியை மறுத்ததுடன், அதனை விபரித்திருந்தார். அவ்வாறு அவர் முதலீடு செய்திருந்தாலும் அதில் எந்தவித குற்றமுமில்லை.
சில தகவல்களின் படி, 11 பேர் மீது “தங்க வழங்கல் ஒப்பந்தம் தொடர்பான ஏமாற்றம்” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது வெளிநாட்டு தங்க முதலீடுகள் எவ்வளவு பாதுகாப்பானவை ? என்ற கேள்வியை எழுப்புகின்றது.
தங்கம், வைரம் போன்ற கனிமங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெருத்த இலாபங்களைப் பெறலாம். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் பல சமயங்களில் வெளிநாட்டு அரசியல், உள்ளூர் சட்டங்கள், மற்றும் இடைத்தரகர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் ஆபத்தானதாக மாறுகிறது.
சில சமயங்களில் போலி உரிமம் அல்லது தவறான நில ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல், ஊழல், உள்ளூர் அதிகாரிகளின் தலையீடு மற்றும் சட்டப்பூர்வம் இல்லாத சுரங்கங்கள் முதலீட்டாளர்களை சிக்கலில் ஆழ்த்துகிறது.
கானாவில் தங்கம் மட்டுமல்ல, மோசடிகளும் நிறைந்துள்ளது. அங்கு பல ஆசிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறான ஏமாற்று மோசடிகளில் அரசாங்க அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இவ்வாறான கனிம வர்த்தகங்களில் முதலீடு செய்வதற்கு முன்பாக,
அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அனுமதி முறைமையை பரிசீலித்தல், நாடுகளிடையேயான இருதரப்பு ஒப்பந்தம், சர்வதேச வங்கிகள் வழியாக சட்டரீதியான நிதி உறுதிப்படுத்தலுடன் பணப் பரிமாற்றம் ஆகிய மூன்று விடையங்களை கடைப்பிடித்தல் வேண்டும். இல்லையெனில், போலியான கனிம ஒப்பந்தங்களின் வலையில் சிக்கவேண்டி ஏற்படும்.
கானாவில் நடைபெற்றதனை ஒரு தனிநபர் சம்பவமாக அல்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டாளர்கள் உலக சந்தையில் சந்திக்கும் அபாயத்தின் பிரதிபலிப்பாகும்.
எனவே இவ்வாறான தொழில் முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் அது வரவேற்கத்தக்கது. ஏனெனில் இந்த முயற்சிகள் வெற்றியடைந்தால் அது நாட்டுக்கு நல்லதே தவிர, அதில் எந்தவித தீமையும் இல்லை.
ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அரசியல் நோக்கத்தில் வேண்டுமென்று மாற்றுக் கட்சியினர் அவரை விமர்சிப்பதானது கானாவின் தங்கச் சுரங்க ஏமாற்றைவிட பெரிய மோசடியாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments