புத்தளம் தள வைத்தியசாலையில் சுற்றித் திரிந்து அச்சுறுத்தலை தரும் நாய்களுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும். பைசல் எம்.பி.யும், மேயர் ரின்சாத் அஹ்மதும் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவிப்பு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தள வைத்தியசாலையில் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நாய்களின் தொல்லைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளை நோக்கி தாம் பயணிப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
புத்தளம் மாநகர அபிவிருத்தி குழுவின் தலைவராக தான் தெரிவு செய்யப்பட்ட பிறகு புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்திகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறோம்.
அதில் நாம் மேற்கொள்ளும் பாரியதொரு பிரச்சினைதான் புத்தளம் வைத்தியசாலையில் அடைக்கலம் புகுந்துள்ள நாய்களின் தொல்லை.
ஏற்கனவே வைத்தியசாலையில் சுற்றித் திரிகின்ற இந்த நாய்களை பிடித்து தனியாக அவைகளை அடைத்து வைத்து பின்னர் அப்புறப்படுத்துவதற்கும், ஆங்காங்கே உணவுகளை வைக்காமல் பாதுகாப்பதற்கும் எடுத்த நடவடிக்கைகள் காலப்போக்கில் கைவிடப்பட்டது.
எனினும் இது தொடர்பாக எனக்கு விடுக்கப்படும் பல்வேறு விதமான அழுத்தங்களின் மத்தியிலே அரசாங்கத்தின் மூலமாக இதனை தீர்த்து வைப்பதற்காக இது தொடர்பாக நான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்து வனஜீவராசிகள் திணைக்களத்தோடு இணைந்து நாய்களை அப்புறப்படுத்தவுள்ளோம்.
பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் வைத்தியசாலையில் உலா வருகின்றன நாய்களை பிடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றோம்.
எல்லாவற்றுக்கு மேலாக இதற்கு சரியான தீர்வாக வைத்தியசாலையை சுற்றி சூழ உள்ள பிரதேசமெங்கும் சுற்று மதில் அமைப்பதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம்.
புத்தளம் தள வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது மாத்திரமல்ல எமது இந்த முயற்சியோடு புத்தளம் மாநகர சபை மேயர், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், கல்விமான்கள் என பலரும் கை கோர்த்துள்ளனர்.
புத்தளம் தொகுதியில் வாழ்கின்ற அனைத்து இன மக்களையும் சுகாதார மேம்பாட்டோடு வாழ்வதற்கான உரிமையினை பெற்றுக்கொடுப்போம் எனக்கூறினார்.
புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹமத் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
புத்தளம் வாழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சினைதான் புத்தளம் வைத்தியசாலையிலே நாய்களுடைய தொந்தரவுகள். இவைகளை இல்லாமல் ஆக்குவதற்காக கடந்த கடந்த காலங்களில் பல முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும் இதற்கான நிரந்தர தீர்வு என்பது வைத்தியசாலையை சூழ சுற்றுவதில் அமைப்பதேயாகும். இதற்காக வேண்டி பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தனவந்தர்களை அணுகி இதற்கான நிதி உதவி பெற்று கொள்வதற்கும் முயற்சிக்கின்றோம். மாகாண பணிப்பாளரிடமிருந்து இது தொடர்பாக அனுமதி பெற நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
இந்த அனுமதியை பெற்று தருவதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அனுமதி கிடைத்ததும் கொடை வள்ளல்களிடமிருந்து அவசர உதவிகளை நாம் அன்போடு எதிர்பார்த்திருக்கின்றோம். இதற்கு மாறாக இந்தத் திட்டத்தை சிறிய குழுக்களோ அல்லது தனிப்பட்ட நபர்களாகவோ செய்ய முற்படும்போது நிச்சயமாக இந்த திட்டத்தில் தடை ஏற்படும். எனவே இந்த வேலை திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நினைப்பவர்கள் எம்மோடு கைகோர்க்க வருமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றோம் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன், வைத்தியர் ஹனான் அஹ்மத், வைத்தியர் ஹிராஸ், ஓய்வு பெற்ற முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களான சர்ராஜ் லாபிர், முஹம்மது ஜஹாஸ் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






No comments