சாம்பியன் கிண்ணத்தை ஸாஹிரா பழைய மாணவர் குழுவான "சிகோன்" சுவீகரித்தது.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழகம் மற்றும் புத்தளம் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த பாரம்பரிய பீல்ட் கேம் வொலிபோல் சுற்றுப்போட்டி புத்தளம் சவீவபுரம் வொலிபோல் மைதானத்தில் சிறப்பாக நிறைவு பெற்றது.
தொடரின் இறுதி போட்டியில் ஹைட்ரா ஸாஹிரா பழைய மாணவர் குழுவோடு மோதிய சிகோன் பழைய மாணவர் அணி, சிறப்பான ஆட்டத்தினால் வெற்றி வாகை சூடி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல்,
விசேட அதிதியாக புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மத் ஆகியோர் பங்கேற்றதுடன், மாநகர சபை உறுப்பினர்கள், கல்லூரி அதிபர், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நகரக்கிளை தலைவர், சோஷியல் கழகத்தின் மூத்த வீரர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் புத்தளம் சாஹிரா கல்லூரி வளாகத்தில் சகல வசதிகளுடனான புதிய வொலிபோல் கோர்ட்டை நிறுவுதல் என்பதாகும். இதற்கான வேண்டுகோள் நிகழ்வின் போது அரசியல் தலைமைகளிடம் முன்வைக்கப்பட்டது.
அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சோஷியல் கழக மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட அதிதிகள் இடையிலான வொலிபோல் போட்டிகளும் மகிழ்வை கூட்டின.
No comments