Breaking News

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.

இலங்கை அரசியலிலும் முஸ்லிம் அரசியலிலும் மர்ஹும் அஷ்ரப் என்ற ஆளுமை தவிர்க்க முடியாத சக்தி. சிறுபான்மைத்தலைவராக பெரும்பான்மை இன ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத்திகழ்ந்தார். 


அதிகார அரசியலில் சிறிது காலப்பயணமாக இருப்பினும் அவரின் ஆளுமைகள் இன்றும் இலங்கை அரசியலில் பலரால் அசைபோடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.


அரசியல் சாத்தியமானதை சாதிக்கும் கலை என்பார்கள். அஷ்ரப் தனக்கு சாதகமாக வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல விடயங்களை சாதித்துக்காட்டினார்.


அதிலும், இன்று வரை சிறுபான்மைக்கட்சிகள், சிறிய கட்சிகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கும் இன்றைய ஆட்சியாளர்களான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தியும் அரியாசணம் ஏறுமளவுக்கு அடித்தளமிட்டவர் அஷ்ரப். அன்று பிரேமதாசவிடம் கேட்டுப்பெற்ற தேர்தல் வெட்டுப்புள்ளியை 5% குறைத்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.


உயர்வான எண்ணங்களோடு, தூரநோக்கோடு தனது அரசியல் பயணத்தைத்தொடர்ந்த அஷ்ரப்பின் அரசியல் பயணம் தங்களுக்கு தலையிடியென உணர்ந்தவர்களின் சதியா? அல்லது விபத்தா? என்ற கேள்வியோடு இன்று வரை தொடர்கின்றது அஷ்ரப்பின் திடீர் மறைவின் மர்மம்.


அஷ்ரப் மரணித்தார். தலையிடி தீர்ந்தது என பேரினவாதம் மகிழ்ந்தது. ஆனாலும், அவரின் கட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டிருப்பது அவரின் இலக்கை அடைந்து கொள்ள வழிவகுக்கும் என அஞ்சி, சதிக்கு மேல் சதி செய்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அதற்குள்ளிருந்த சிலரை பதவி ஆசை காட்டி உடைத்தெடுத்து பதவி கொடுத்து தலைவர்களாக்கி முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பலவீனப்படுத்தியது. இன்று வரை முஸ்லிம் அரசியலில் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.


தற்போதைய ஆட்சியாளர்களும் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமை அமைச்சராக நியமிக்கும் மனநிலை இல்லாமல் தான் இருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் மன்னர் காலந்தொட்டு அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து நாட்டுக்கு தொண்டு செய்து வந்த முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவை அடையாளம் இன்று மறுக்கப்பட்டிருக்கிறது.


முஸ்லிம் சமூகத்தில் பல கட்சி தோற்றம் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தியதன் விளைவும், கடந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையும், அவர்களோடு இணைந்து பயணித்த அரசியல்வாதிகளின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவும் முஸ்லிம் சமூகம் தங்களின் பெருவாரியான வாக்குகளை அனுர பெற்று ஜனாதிபதியாக உறுதியான ஆட்சியைக்கொண்டு செல்வதற்கும் வழங்கினார்கள்.


இவ்வாறான சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் அமைச்சரவை உட்பட பல முக்கிய நியமனங்களில் தகுதியானவர்கள் இருந்த போதும், அவர்கள் புறக்கணக்கப்பட்டமை உட்பட பல அசெளகரியங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்த நிலையில், இந்த நாட்டில் தாங்களும் தனித்துவமான இனம் என்பதையும், தங்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், ஏனைய இனத்தவர்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவற்கும் உரித்துடைய சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.


அரசியல் அரங்கில் முஸ்லிம் சமூக அரசியலை உயிர்ப்போடு கொண்டு செல்ல அஷ்ரப் காட்டிய வழிமுறைகளை இளம் சந்ததி அறிந்து கொள்ளச் செய்வதோடு, அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலை தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பான தெளிவான ஞானத்தையும் இன்றைய இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு இளம் தலைமுறையினரையும், கல்வியலாளர்களையும் உள்ளீர்த்து புத்துயிரளிக்கும்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும்.


பெரும் தலைவர் அஷ்ரப் மரணித்து 25 வருடங்கள் நிறைவடையும் தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மீண்டும் உயிரூட்டும் அரசியல் யுக்திகள் தொடர்பில் அவதானஞ்செலுத்த வேண்டும்.


தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் பல சவால்கள், துரோகங்களுக்கும் முகங்கொடுத்து கட்சியை முன்கொண்டு செல்கிறார்.  மேலும் கட்சியை வலுவூட்டும் நடவடிக்கைகளிலும் கவனஞ்செலுத்தி வருகிறார்.


பின்வரும் விடயங்களில் கவனஞ்செலுத்துவதும் கட்சிக்கு புத்துயிரளிக்கும்.


01.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் பற்றிய தெளிவான அறிவை கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு மீண்டும் நினைவூட்டுதல் அவசியமாகிறது. 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களாக பின்வருபவனவற்றைப் பார்க்கலாம்.


*முஸ்லிம்களின் நலன் :-

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் முன்னேற்றத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்.


*ஜனநாயகத்தின் நிலைநிறுத்தம்:- 

ஜனநாயக முறைகள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல்.


*ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்:- 

முஸ்லிம் சமூகத்தின் உட்பகையைத்தவிர்த்து, அவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குதல்.


*தேசிய ஒற்றுமை :- 

பிற இன, மத சமூகங்களுடனான நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் மேம்படுத்துதல்.


*அரசியல் பிரதிநிதித்துவம்:- 

உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்றம் உள்ளிட்ட சகல் நிலைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறல்.


*சமூக முன்னேற்றம்:- 

கல்வி, கலாசாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சியை உறுதி செய்தல்.


*சமாதானம்:- 

நாட்டில் நிலையான அமைதி, சமாதானம், சமநிலை ஆகியவற்றை நிலைநிறுத்த முயற்சித்தல்.


உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை நோக்கும் போது பலரால் இனவாதக்கட்சி என குற்றஞ்சாட்டப்படுவது அடிப்படையற்றது என்பதை விளங்கிக்கொள்வதோடு, ஒரு ஜனநாயகக்கட்சி என்பதை தெளிவாகப்புரிந்து கொள்ள முடிகிறது. 


2. புதிய தலைமுறை முன்னேற்றம்:-


இன்றைய தலைமுறை மக்கள் (இளைஞர்கள், கல்வியறிவு பெற்றவர்கள்) - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை “பழைய கட்சி, இனத்துவக்கட்சி” எனக்கருதுகிறார்கள்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியத்தை எடுத்துக்கூறி இளைஞர்கள், பெண்கள், கல்வியாளர்கள் கட்சிக்குள் உள்வாங்கி முன்னுரிமை வழங்க வேண்டும்.

தூய்மையான, ஊழலற்ற முகங்களை முன்வைக்க வேண்டும்.


அரசியலில் நம்பிக்கை இழந்த முஸ்லிம் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக, புதுமையான யோசனைகள் (Digital platforms, job creation policies) கொண்டு வர வேண்டும்.


3. மக்கள் பிரச்சினைகளில் நேரடி ஈடுபாடு:-


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று “கூட்டணி அரசியல்” என்ற பெயரில் அமைச்சுப்பதவிகளை மட்டுமே நாடுகிறது என்ற குற்றச்சாட்டுண்டு.


இதைத்தகர்க்க, பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள், மீனவர்கள், சிறுதொழிலாளர்கள் பிரச்சினைகள் மற்றும் பிரதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும்  பிரச்சினைகளை தனித்துவமாக எடுத்துரைக்க வேண்டும்.


கிராம, மாவட்ட மட்டத்தில் உண்மையான சமூகப்பணி செய்ய கட்சி மட்டத்திலுள்ள நிருவாகிகள் தயாராக வேண்டும், இதற்குப்பொருத்தமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நிருவாகப்பொறுப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.


4. இன ஒற்றுமை – பாலம் கட்டும் பங்கு:


அஷ்ரப்பின் கனவான தேசிய ஐக்கிய முன்னணி( NUA ) – எல்லா இனங்களையும் இணைக்கும் மேடையாக பார்க்கப்பட்டது.


இன்று  அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக உயிர்ப்பிக்க தமிழர்களுடனும் சிங்களர்களுடனும் உண்மையான சமரச அரசியல் செய்ய வேண்டும். 


முஸ்லிம் பிரச்சினைகளைத் தனியாகப்பேசினாலும், நாட்டின் ஒருங்கிணைந்த பிரச்சினைகளிலும் பங்களிக்க வேண்டும். (தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்சொன்ன விடயத்தில் தொடராக பங்களிப்புச்செய்து வருகிறார்)


5. கொள்கை மற்றும் நெறிமுறை புதுப்பிப்பு:-


வெளிப்படையான கொள்கை அறிக்கை (Policy Manifesto) தயாரிக்க வேண்டும்.

ஊழல், குடும்ப அரசியல், பதவி வியாபாரம் ஆகியவற்றைத்தவிர்த்து, நேர்மை என்ற முகத்துடன் செயற்பட வேண்டும்.


6. தேசிய அரசியலில் தனித்துவ பங்கு:-


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் “பெரிய கட்சிகளின் துணைக்கட்சி” என்ற விமர்சனம் இருக்கிறது.


ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தளவில் சுயாதீன முடிவுகளை பல சந்தர்ப்பத்தில் எடுத்திருக்கிறது.


தேர்தலில் தனித்துப்போட்டியிடும் துணிச்சல் இக்கட்சியிடம் இருக்கிறது.


அரசாங்கத்தில் சேரும் போது கூட, முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் உறுதிகளையும் பல சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்டிருக்கிறது.


தற்போதைய  தலைவர் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகள்


*சமூக ஒருமையை மீட்டெடுத்து வலிமை கொடுக்கல்:- பிரிவுகளை ஒன்றிணைத்து சமூகத்தின் அடிப்படை சக்தியை உறுதி செய்தல்.


*பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல்:- எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமூகத்தின் உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் கவனம்.


*அரசியல் திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்துதல். தேர்தல் வாக்கு சக்திகளை கணக்கிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


*இளம் தலைமுறைக்கு வழிகாட்டுதல்:- 

அஷ்ரப் காட்டிய அரசியல் வழிமுறைகள் இளம் தலைமுறை அறிந்து பின்பற்றச்செய்தல்.


இன்றைய சூழ்நிலையில் அடுத்த தலைமுறை நோக்கி கட்சியை நகர்த்த வேண்டியது அவசியமாகிறது.


இன்றைய சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும், அடுத்த தலைமுறை மூலம் சமூக அரசியலை வலுப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.


*இளம் தலைமுறை உரிமையாளர்களை கட்சியில் சேர்ப்பது :- 

இளம் இளைஞர்களின் திறன், கற்பனை மற்றும் உற்சாகத்தை கட்சிக்கு புதுப்புயிர் கொடுக்கப் பயன்படுத்துதல்.


*சமூகப்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒருமை வலுப்படுத்தல்:- சமூகத்திலுள்ள அனைவரும் கட்சியின் செயற்பாடுகளுக்கு இணைந்து பங்களிக்கத்தூண்டுதல்.


*அரசியல் கல்வி மற்றும் பயிற்சி:- 

அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலையை அறிந்து, தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்க்கட்சிப் பங்களிப்பை திட்டமிடும் திறன் வளர்த்தல்.


*முஸ்லிஸ் சமூக உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பாதுகாப்பது :- 

சமூகத்தின் நியாயமான உரிமைகள், வாக்கு சக்தி மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.


*முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவாக்கல்:-  

சமூக நலன், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் நடவடிக்கைகள்.


இவ்வாறு, அடுத்த தலைமுறை உருவாக்கப்படும் வழியோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சமூகத்திற்கும் அரசியலிற்கும் உறுதியான பங்களிப்புச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கு கட்சிக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்து பொருத்தமான நபர்களாக இளைஞர்கள், கல்வியலாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளீர்த்து பொறுப்புகளைக்கையளித்து, ஆலோசனைகளை வழங்கி, கண்காணிப்புகளை மேற்கொள்வதனூடாக சிறப்பான அடைவுகளைக்காணலாம்.


அஷ்ரப் கால சாதனைகள், பெற்ற உரிமைகள், நுட்பமான அரசியல் நகர்வுகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரின் செயற்பாடுகள் இணைந்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிஸ் சமூக அரசியலை வலுவாக்கும் வழிமுறையை உருவாக்குகின்றன.


இளந்தலைமுறை இதனைப்பின்பற்றி, சமூக ஒற்றுமை, அதிகாரம் மற்றும் உரிமைகளை வலுப்படுத்தி, அஷ்ரப் இலக்குகளைத்தொடர வேண்டும். இதன் மூலம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  முஸ்லிஸ் சமூக அரசியல் மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய பாத்திரம் வகிக்கும்.


எனவே, மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதோடு நின்று விடாது, அவரின் நோக்கங்களை வெற்றி பெறச்செய்ய அனைவரும் திடசங்கம் பூண வேண்டும்.




No comments