அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய களநிலவரம் களப் பரிசோதனைகள், அதனுடைய குறைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ திடீர் விஜயமொன்றை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அக்கரைப்பற்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க, இந்தத் தரிசிப்பு இடம்பெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, முதன்மை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் பார்வையிடப்பட்டதோடு, வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் தற்போதைய சவால்கள், மனித மற்றும் பௌதீக வளப் பிரச்சினைகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.
நிர்வாகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட புதிய கிளினிக் தொகுதியின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டம் குறித்தும், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, கல்முனை தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா,மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments