Breaking News

சுயநலவாதிகளால் இறுதிக்காலத்தில் தலைவர் அஷ்ரப் எதிர்கொண்ட நெருக்கடி.

தலைவர் அஷ்ரப் அவர்களின் இறுதிக்காலம் அரசியலில் அவருக்கு மிகவும் நெருக்கடி மிகுந்ததாக இருந்தது. அதிகாரத்தில் இருந்ததன் காரணமாக முழு சமூகத்தையும் திருப்திப்படுத்த முடியவில்லை. அவ்வாறு திருப்திப்படுத்தவும் முடியாது. 


ஏராளமான அபிவிருத்திகளை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு துறைமுக அதிகார சபையிலும், ஏனைய இடங்களிலும் அரச தொழில் வழங்கினார். அவ்வாறு வழங்கியிருந்தும் கிடைத்தது என்று திருப்தி அடைந்தவர்களைவிட, கிடைக்கவில்லை என்று தலைவரை விமர்சித்தவர்கள் அதிகம். 


தனது ஒரு மகனுக்கு துறைமுக அதிகார சபையில் தலைவர் உத்தியோகம் தந்தார் என்று மகிழ்ச்சியடையாமல், தனது இளைய மகனுக்கும் தொழில் தரவில்லையே என்று தலைவரை விமர்சித்தவர்களும் உண்டு. 


அதற்கு மேலதிகமாக, கட்சியில் உள்ள பிரமுகர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புக்களும் பெரிதாக இருந்தது. பலர் அதிகாரத்தை அனுபவித்தனர். அனுபவிக்காதவர்களும் இருந்தனர். தலைவரை சந்திக்க முடியாமல் அவதிப்பட்டவர்களும் இருந்தனர். 


செல்லுகின்ற இடமெல்லாம தலைவரை விமர்சித்து வசைபாட ஆரம்பித்தனர். இப்போது உள்ளது போன்று சமூக வலைத்தளங்கள் அப்போது இருக்கவில்லை. சிலர் தலைவருக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். 


முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சியான நிலை தென்பட்டதனை 1999 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்பு தலைவர் உணர ஆரம்பித்தார். 


சாய்ந்தமருதுக்கான தனியான “பிரதேச செயலகம்” வழங்கினால்தான் நாங்கள் உங்களுக்கு ஆதவு வழங்குவோம் என்று அம்பாறை சேகுட் பங்களாவில் தலைவர் அஷ்ரப்பை சந்தித்து அழுத்தம் வழங்கினோம். 


சாய்ந்தமருது அமைப்பாளர் புர்கான் தலைமையிலான அந்த குழுவில் நானும் சென்றிருந்தேன். அப்போது தலைவர் அவர்கள் மருந்து மாத்திரை பக்கட்டுகளை காண்பித்து தனக்கு இருக்கின்ற நோய், மன அழுத்தங்கள் மற்றும் மரணம் பற்றியும் விபரித்தார்.  


அன்றைய சந்திப்பின் பிரதிபலிப்பாகவே 1999 இல் சாய்ந்தமருதுக்கான “உப பிரதேச செயலகம்” அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது. 


கிழக்கு மாகாணத்தின் கட்சி முக்கியஸ்தர்களை நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்று தனித்தனியாக சந்தித்து அவர்களது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார். 


2000 ம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய வீழ்ச்சி காத்திருக்கின்றது என்ற தோற்றப்பாடு காணப்பட்டது. இந்த நம்பிக்கையில்தான் தலைவர் அஷ்ரபை எதிர்த்து மயோன் முஸ்தபா ஐக்கிய தேசிய கட்சியில் களமிறங்கினார். 


இவ்வாறான நிலையிலேயே எவரும் எதிர்பாராமல் 2000.09.16 இல் ஹெலிக்கொப்டர் விபத்தில் தலைவர் மரணித்தார். 


தலைவர் மரணித்தார் என்ற செய்தி வெளியானதும் அவரை போற்றியவர்கள் மட்டுமல்ல, அவரை தூற்றியவர்கள், வசை பாடியவர்கள் அனைவரும்  அழ ஆரம்பித்தனர். அனுதாப அலை காரணமாக குறைந்திருந்த முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. அதாவது அரசியல் கள நிலவரம் தலைகீழாக மாறியது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments