பட்டலந்த வதை முகாம் தொடர்பில் ஏன் ரணில் தண்டிக்கப்படவில்லை ? .
ஜே.வி.பி யின் இரண்டாவது எழுச்சி 1987, 1988, 1989 ஆகிய மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது. அப்போது ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்பு ஜே.வி.பி யினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அதை ஜே.வி.பி நிராகரித்தது.
ஜனாதிபதி பிரேமதாசாவிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரது அரசியல் எதிரிகளை நண்பர்களாக மாற்றிகொள்ளுதல் அல்லது போட்டுத் தள்ளுதல். இதுதான் பிரேமதாசாவின் கொள்கை.
சிங்களப் பகுதிகளில் எப்போதுமில்லாத அளவில் ஜே.வி.பி க்கு செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. அதனாலேயே அவர்களை அரசியல் பங்காளிகளாக ஆக்கிக்கொள்வதற்காக பேச்சுக்கு அழைத்திருந்தார் பிரேமதாச.
தென்னிலங்கையில் ஜே.வி.பியினர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்தபோது ஜே.வி.பி யின் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ரணில் விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டதுதான் இன்றுவரையில் மிகவும் பிரபலமாக பேசப்படுகின்ற “பட்டளந்த” வதைமுகாமாகும்.
1994 இல் சந்திரிக்கா ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததன் பின்பு பட்டலந்த விசாரணை ஆணைக்குழு 1996 இல் நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது. அதில் கொல்லப்பட்டவர்களில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கண்டறியப்பட்டது.
1988 இல் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 64 கட்டடங்களை உள்ளடக்கிய இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக மாற்றியிருந்தது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டார். கடத்தி வரப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக கை, கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் இந்த வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி 1996 நவம்பரில் குற்றத்தடுப்பு பிரிவினராலும், 1997 ல் ஜனாதிபதி ஆணைக் குளுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார்.
பின்பு பதினொரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிசை கைதுசெய்ய இருந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.
இங்கே கேள்வி என்னவென்றால் பட்டலந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தப்பித்தார். பல காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஏன் ரணில் விக்ரமசிங்கவவை கைது செய்யவில்லை ?
பட்டலந்த வதை முகாமானது ரணில் விக்ரமசிங்க அப்போது அமைச்சர் என்றவகையில் மேற்பார்வையாளராக இருந்தாரே தவிர, நடவடிக்கைக்கு பொறுப்பாளாராக இருக்கவில்லை. நடவடிக்கைக்கு பொறுப்பாளாராக இருந்தது டக்ளஸ் பீரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments