Breaking News

மருத்துவ துறை தாண்டி மானுடம் வாழ அனைத்து துறைகளையும் அங்கீகரிப்போம்

ஆக்கம்: அப்துல் அஸீஸ் - கிண்ணியா 

"கல்வி என்பது ஒரு மாபெரும் சொத்து" என்பதிலே யாருக்கும் ஐயமில்லை. மனித வாழ்க்கையை உயர்த்தும் முதன்மையான உபகரணமாக கல்வி விளங்குகிறது. கல்வி என்பது சாதாரணமாக அறிவைப் பெருக்கும் செயல் மட்டுமல்ல; அது ஒருவரின் நற்சிந்தனையும், நற்குணங்களையும் வளர்க்கும் உன்னதப் பணியாகும்.


இன்றைய சமூகத்தில் கல்வி என்பது ஆன்மீகம் – லௌகீகம் எனப் பிரித்து பார்க்கப்படுகிறது. ஆனால், இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட கல்வியே உண்மையில் "பிரயோசனமிக்க கல்வி" எனக் கூறப்பட வேண்டிய ஒன்று. எந்த கல்வி துறையாயினும், மனிதனுக்கு உபயோகமாக இருந்தால் அது இறைதிருப்திக்குரியது.


இந்நிலையில், பல மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பாக புலமைப் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியடைய செய்கின்றன. ஆனால் ஒரு வேதனையான உண்மை இங்கு உள்ளது. அதாவது, பல இடங்களில் இந்தப் புலமைப் பரிசுகள் பெரும்பாலும் மருத்துவக் கல்விக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றன. இது கல்வியின் முழுமையான இலட்சியத்துக்கு விரோதமாக அமைவது தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது.


மருத்துவத் துறை, நிச்சயமாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருக்கலாம். ஆனால் அதன் பொருட்டு மற்ற துறைகள் புறக்கணிக்கப்படக் கூடாது. கல்வி என்பது ஒரே துறைக்கே உரியது அல்ல. அறிவியலும், சட்டமும், கல்வி ஆசான்கள் தயாரிக்கும் துறையும், சமூகவியல், உளவியல், பொருளியல், தொழில்நுட்பம், கலையும் இலக்கியமும் போன்ற எல்லா துறைகளும் சமமான முக்கியத்துவம் கொண்டவை.


அதனால்தான், புலமைப் பரிசுகள் வழங்கும் நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நற்பணிக்காக செயல்படுபவர்கள், எந்த ஒரு துறையையும் மேன்மையானதாக மட்டும் கருதாமல், ஒவ்வொரு துறையும் சமுதாயத்திற்குத் தேவையானது என்பதை உணர்ந்து, அனைத்து துறைகளுக்கும் சம உரிமையுடன் உதவிகள் வழங்க வேண்டும். இதுவே ஒரு சமநிலையான, நீதி சார்ந்த மற்றும் பயனுள்ள கல்வி உதவித் திட்டமாக அமையும்.


கடந்த காலங்களில் படிக்கும் மாணவர்கள் என்பதை மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் என்ற வகையில் நோக்கப்பட்ட நிலை தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இதுவும் ஆரோக்கியமானது என்று புகழ வேண்டிய தேவையும் இருக்கிறது. 


மருத்துவத்துறைக்குச் சென்றவர்கள் புலமைப் பரிசீல்களை பெற்று படித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து சமூக உணர்வோடு சமூகக் களத்தில் செயல்படுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. 


சமுதாயம் உருவாக்கியவர்கள் சமுதாயத்துக்கு பிரயோசனமாக இருக்கிறார்கள் என்பது உதவி செய்தவர்கள் எதற்காக உதவி செய்தார்களோ அந்த இலட்சியத்தை அடைந்து கொண்டார்கள் என்பதை நினைத்து அவர்கள் ஆனந்தம் அடைகிறார்கள். 


இன்றைய இந்த கல்வி கற்கும் சமூகம் மேம்பட்டால் மாத்திரமே ஒரு சமூகம் மேம்பட்டது என்று நாங்கள் மகிழ்ச்சி அடையலாம். 


எனவே கல்வியை பிரித்து நோக்காமல் எல்லா வகையான கல்விக்கும் உதவி செய்து சமுதாயத்தை வாழ வைக்கும் கல்வி சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.




No comments