Breaking News

பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரிப்பதில் மேற்குலகின் திடீர் பாசம்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஹமாஸ்–இஸ்ரேல் போரில், அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் பிரான்ஸ், பிரிட்டன், கனடா, ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகள், பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமெனச் சாதக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஏனைய நான்கு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், அதனால் யதார்த்தத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை அவை நன்கு அறிந்திருக்கும்.


உண்மையில், இந்த நாடுகள் உண்மையான ஆவலுடன் பாலஸ்தீனை தனிநாடாக உருவாக்க விரும்பியிருந்தால், அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயற்சித்திருப்பதுதான் சரியான அரசியல் நடைமுறையாக இருந்திருக்கும்.


ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும் தங்களது நாட்டினுள் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புகளை சமாளிக்கவே, இவ்வாறான அறிக்கைகள் வெளிப்படையாக "அரசியல் சமநிலை முயற்சி" என்றே தோன்றுகின்றன.


மேலும், பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரிக்கவும், ஆனால் ஹமாஸ் இயக்கம் அதில் இடம் பெறக்கூடாது, அவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது, ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை விதிப்பதன் மூலம், மேற்குலக நாடுகளின் உண்மையான நோக்கங்களை நாம் புரிந்துகொள்ளலாம்.


இது, "ஹமாஸ் இருக்கும் வரையில் பாலஸ்தீன் சுதந்திரம் இல்லை" என்ற கருத்தை உருவாக்கி, பாலஸ்தீன் மக்களை ஹமாஸுக்கு எதிராக திருப்பும் முயற்சியாகவும் கொள்ளலாம்.


இன்றும் ஹமாஸ் இயக்கம் ஆயுத பலத்துடன் உள்ளதால், காசா மற்றும் மேற்குகரை முழுமையாக இஸ்ரேலால் ஆக்கிரமிக்க முடியாமல் உள்ளது. இந்த இயக்கம் நிராயுதபாணியாகப்பட்டால், பாலஸ்தீன் முழுவதையும் எளிதில் ஆக்கிரமிக்க இஸ்ரேலுக்கு வாய்ப்பு உருவாகும்.


"பாலஸ்தீனுக்கு திடீர் பாசம்" எனும் மேற்குலக நாடுகளின் அணுகுமுறை, உண்மையில் ஹமாஸை ஒழித்து, பாலஸ்தீனின் எதிர்ப்புகளை முடக்குவதாகவே இருக்கக்கூடும்.


இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை தடுத்து வருகின்ற பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள், இஸ்ரேலுக்கு விருப்பமில்லாத கருத்துகளை முன்வைக்கும்போது, அவற்றை நம்மால் சந்தேகமின்றி ஏற்க இயலாது.


எது எப்படி இருந்தாலும், மேற்குலக நாடுகளின் பாலஸ்தீன் சார்ந்த அறிக்கைகள், உலகளாவிய அளவில் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பலைகளை அதிகரிக்கச் செய்துள்ளன. இதன் காரணமாக, பாலஸ்தீனின் நியாயமான பார்வை இன்று மேலும் மேலோங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது




No comments