Breaking News

“வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம்” சாணாக்கியனின் கருத்துக்கு முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பது ஏன் ?

“வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம்” என்று தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் கூறியதாக சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனத்தை பார்க்கின்றபோது ஆழ்ந்த தூக்கத்திலிருந்த ஒருவர் திடீரென விழித்தெழுந்து திசை தெரியாமல் தடுமாருவது போலுள்ளது.


வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது தமிழரசு கட்சி மட்டுமல்ல, EPDP, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், முன்னாள் ஆயுத இயக்கங்கள் என அனைத்து தரப்பினரின் அடிப்படை கொள்கையாகும். இந்த கொள்கை இல்லாதவர்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 


தமிழரசு கட்சியை சேர்ந்த சாணாக்கியன் எம்பி தனது கட்சியின் கொள்கைக்கு அமைவாக “வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம்” என்ற அவரது அறிக்கையை, சாணாக்கியன் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு நாங்கள் விமர்சிப்பது எமது அரசியல் அறியாமையை குறிக்கின்றது. 


வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இன்று நேற்று உருவான கருத்தாடல் அல்ல. அது 1952 இல் தந்தை செல்வாவினால் தமிழரசு கட்சி ஆரம்பித்ததிலிருந்து அக்கட்சியின் அடிப்படை கொள்கையாக உள்ளது. 


இந்த கொள்கையுடைய கட்சியில்தான் முஸ்லிம்கள் பலர் அப்போது பயணித்ததுடன், கல்முனையின் சிற்பியான எம்.எஸ். காரியப்பர் பாராளுமன்றம் சென்றார். 


அத்துடன் 1977 இல் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் “அண்ணன் அமர்தலிங்கத்தினால் தமிழீழம் பெற முடியாவிட்டால், தம்பி அஷ்ரப் அதனை பெற்றுத்தருவார்” என்று தலைவர் அஷ்ரப் அப்போது கூறியது பேசுபொருளாக இருந்தது.  


1976 இல் தமிழரசு கட்சியின் தலைவர் தந்தை செல்வாவினால் தமிழீழமே இறுதி முடிவு என்ற “வட்டுக்கோட்டை” பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழர்களின் அரசியல் நகர்கிறது.  


ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் உள்ளது. அவ்வாறு கொள்கைகளில் வேறுபட்டாலும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற ரீதியில் முரண்பாடான கொள்கையுள்ள கட்சிகள் ஜனநாயக அரசியலில் பொதுவான இணக்கப்பாட்டுடன் பயணிப்பது வழமை. 


2004 இல் சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்சவுடன் JVP பயணித்தது. அதுபோல் 2010 தேர்தலில் UNP, JVP, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய ஒன்றுக்கொன்று முரண்பாடான கட்சிகள் பொது உடன்பாட்டுடன் செயற்பட்டது. நடைமுறை அரசியலில் இது ஒன்றும் ஆச்சர்யமான விடயமல்ல. 


ஆனால் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று சாணாக்கியன் எம்பி புதிதாக கூறியது போன்று, அவரது கூற்றுக்காக முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து புரளியை கிளப்புவதானது அரசியல் வங்குரோத்துத்தனம் என்று எடுத்துக்கொள்ளலாம். 


இவ்வாறு விமர்சிப்பவர்கள் எவரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்ல. மாறாக முஸ்லிம் காங்கிரசை அழிக்க வேண்டுமென்று நாளாந்தம் உழைப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments