Breaking News

பலஸ்தீனுக்குத் துணை நிற்கும் சவூதி அரேபியா; இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் முக்கிய நகர்வுகள்..!

✍️ எஸ். சினீஸ் கான்

மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் மனிதாபிமான அரங்கில், சவுதி அரேபியா சமீபகாலங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் வலுவான, அதிவேகமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உலகளவில் கவனத்தை ஈர்த்த முக்கியமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


சவூதி வெளிவிவகார அமைச்சர், பிரிட்ன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சகாக்களுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு, காசா பகுதியின் மனிதாபிமான நிலைமை குறித்தும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். அதேவேளை, இரு-நாடுகள் தீர்வை வலியுறுத்தும் சவூதி முயற்சிகள் காரணமாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் பலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் முனைப்பை எடுத்துள்ளன.


சவூதி அமைச்சரவை, பலஸ்தீன மக்களுக்கு தனது உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி, ஆக்கிரமிப்பு படைகளின் குற்றங்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காசா மீது ஆக்கிரமிப்பு நடத்தும் எந்தத் திட்டத்தையும் திட்டவட்டமாக நிராகரித்து, இரு-நாடுகள் தீர்வே பிரச்சினைக்கு நீடித்த தீர்வாகும் என்பதை வலியுறுத்தியுள்ளது.


பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாஸுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை கடுமையாகக் கண்டனம் செய்வதை உறுதி செய்தார். பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் சவுதி அரேபியாவின் உறுதியான பங்கு குறித்து அதிபர் அபாஸும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


அதோடு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்க விரிவான அறிக்கை ஒன்றை தயாரிக்கும் முயற்சியையும் சவூதி அரேபியா மேற்கொண்டு வருகிறது. ஈராக், எகிப்து, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நியோம் நகரில் நடைபெற்ற பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் மற்றும் ஜோர்டான் மன்னரின் உச்சபட்ச சந்திப்பிலும் பலஸ்தீன பிரச்சினை முதன்மையான விவாதப் பொருளாக இருந்தது.


இந்த தொடர்ச்சியான நகர்வுகள், பலஸ்தீன மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் அசைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, முகம்மது பின் சல்மான் அவர்களின் தொலைநோக்கு பார்வை, தைரியமான முடிவுகள், சர்வதேச அரங்கில் சவூதியின் குரலை வலுப்படுத்தியுள்ளது. அவரது உறுதியான தலைமையால், சவூதி அரேபியா இன்று பலஸ்தீன விவகாரத்தில் மட்டும் அல்லாது, உலக அமைதி மற்றும் நீதியின் காவலனாகவும் திகழ்கிறது.


கடந்த வாரத்தின் முக்கிய நகர்வுகள், பலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தும் சவூதி அரேபியாவின் உறுதியையும், முகம்மது பின் சல்மான் தலைமையின் வலிமையையும் உலகுக்கு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.




No comments