Breaking News

அரசியல் விமர்சனமும், வசைபாடலும். இளைய சமுதாயத்தினர் உண்மையை அறிவதற்காக உங்களது ஆதரவினை கோருகிறேன்.

ரவூப் ஹக்கீமை விமர்சிக்கின்றோம் என்ற போர்வையில் அவரை வசை பாடிக்கொண்டும், அவரை கழுவிக் குடித்துக்கொண்டும் முஸ்லிம் காங்கிரசை அழிக்கும் பணியில் சிலர் இரவு பகலாக இயங்கி வருகின்றனர். 


இவ்வாறானவர்களுக்கு பின்னால் முஸ்லிம்களுக்கு விரோதமான சக்தி ஒன்று இல்லாமல் இரவு பகலாக இயங்க முடியாது. 


ரவூப் ஹக்கீம் அரசியலில் தவறு செய்ததனை மறுக்கவில்லை. அதனை பல தடவைகள் நான் விமர்சித்துள்ளேன். நியாயமாக விமர்சிப்பதனை வரவேற்கிறேன். அவ்வாறு தவறு செய்பவர்களை விமர்சிப்பது ஜனநாயக அரசியலில் வரவேற்கத்தக்கது. 


ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் சிலர் வசை பாடுவதையும், தங்களது தனிப்பட்ட ஆத்திரத்தை கொட்டி தீர்ப்பதனையும் அவர்கள் எழுதுகின்ற வரிகளில் காண முடிகிறது. 


இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பிரச்சாரங்களை வரலாறு தெரியாத இன்றைய இளைய சமுதாயத்தினர் உண்மை என்று நம்புகின்ற நிலை காணப்படுகின்றது.  


ரவூப் ஹக்கீமை விமர்சிப்பவர்களை ஒரே கொள்கையுடையவர்களாக கருத முடியாது. அதனால் பின்வரும் வகையில் அவர்களை வேறுபடுத்த முடியும். 


1. கட்சியில் இருந்துகொண்டு தலைவரை விமர்சிப்பவர்கள். 


i. தலைவர் பிழை செய்தால் பயமின்றி அதனை சுட்டிக்காட்டுவார்கள். இவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது.


ii. தனிப்பட்ட நபர்களின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். “ஊருக்கு” என்ற பிரதேசவாதிகளாக இருந்துகொண்டு தனது பிரமுகருக்கு தேசியப்பட்டியலில் எம்பி, பிரதேச சபை தவிசாளர் அல்லது வேறு பதவிகள் வழங்காவிட்டால் தலைவரை விமர்சிப்பார்கள். ஆனால் இவர்களது பிரமுகர் கட்சியில் இருக்கும் வரைக்கும் இவர்களும் கட்சியில் இருப்பார்கள். 


2. தேசிய (சிங்கள) கட்சிகளின் ஆதரவாளர்கள். முஸ்லிம்களுக்கென்று தனியான கட்சி அவசியமில்லை என்ற கொள்கையுடன், தனது தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏதாவது அதிகாரத்தை அடைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இவ்வாறானவர்கள் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரசை ஏற்றுக்கொண்டதில்லை. தலைவரை இலக்குவைத்து தூற்றி வசைபாடினால் முஸ்லிம் காங்கிரசை அழித்துவிடலாம். அவ்வாறு நடந்தால் சன்மானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். இவர்களை “அறவிடமுடியா கடன்” என்றரீதியில் கணக்கெடுக்க தேவையில்லை. எங்களது கருத்துக்கள் எதுவும் இவர்களுக்கு புரியாது. 


3. தலைவர் அதிகாரத்தில் இருந்தபோது அரச தொழில் தரவில்லை, தூர இடங்களுக்கு வந்த வருடாந்த இடமாற்றத்தை தடுக்கவில்லை, தூர இடத்திலிருந்து ஊருக்கு இடமாற்றம் பெற்றுத் தரவில்லை, கொழும்புக்கு சென்று சந்திக்க முடியவில்லை போன்ற தனிப்பட்ட காரணங்களை மனதில் வைத்துக்கொண்டு நியாயவாதிகள் போன்று தலைவரை விமர்சிப்பது. இவர்களிடம் பொதுவான எண்ணங்கள் இருக்காது. 


4. முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று உருவான ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் விலகிச்சென்ற பிரமுகர்களின் ஆதரவாளர்கள். இவர்களில் சிலர் தங்களது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காகவும், இன்னும் சிலர் அடியும் தெரியாது நுனியும் தெரியாமல் விமர்சிக்கின்றனர். 


5. முகநூலில் லைக், கொமன்ட், செயார் போன்றவற்றினை பெறுவதற்காக அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் பொழுதுபோக்குக்காக விமர்சிப்பவர்களும் உள்ளார்கள். 


இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்ற அதிருப்தி என்னிடம் உள்ளது. இது பற்றி பல தடவை தலைவரை விமர்சித்துள்ளேன். ஆனால் வசைபாடவில்லை. 


எனவே கடந்த கால முஸ்லிம்களின் அரசியலில் உண்மை நிலையை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துக் கூறுவது எனது கடமையாகும். அந்த வகையில் சில அரசியல் நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புக்களில் தொடராக எழுதவுள்ளேன். அதற்காக உங்களது ஆதரவினை கோருகிறேன். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments