Breaking News

இதனை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. நல்ல மனோநிலை வேண்டும்.

சிறுபான்மை கட்சிகள் எதிர் தரப்பில் இருக்கும்போது தனது மக்களின் தேவைகளை ஆளும் அதிகார உயர் மட்டத்திடம் கோருவதுதான் மரபுரீதியாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். சிறுபான்மை கட்சிகளின் கௌரவமும், ப்ரொட்டகோலும் இதில் தங்கியுள்ளது. 


அங்கஜன், டக்ளஸ் தேவானாந்தா, கருணா, பிள்ளையான், வியாலேந்திரன் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் என்பதற்காக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருபோதும் இவர்களிடம் சென்று எதையும் கோரியதில்லை. 


தொடர்ந்து எதிர்தரப்பில் இருந்துவருகின்ற நிலையில் நேரடியாக ஆட்சியாளர்களிடமே மக்களின் தேவைகளை தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்தார்கள். 


அதுபோல் ஏ.ஆர். மன்சூர், மஜீத் பி.ஏ போன்றவர்கள் அமைச்சர்களாக அதிகாரத்தில் இருந்தார்கள் என்பதற்காக இவர்கள் மூலமாக தலைவர் அஷ்ரப் எதையும் மேற்கொள்ள முற்படவில்லை. மாறாக எதிர் தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதி பிரேமதாசாவிடமே கோரிக்கைகளை முன்வைத்தார்.  


அதாஉல்லா, றிசாத் பதியுதீன் மற்றும் இன்னும் பலர் அதிகாரத்தில் இருந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் எதிர் தரப்பில் இருந்த நேரத்தில் எந்தத் தேவைகளையும் இவர்கள் மூலமாக மேற்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்ததில்லை. 


அண்மையில் றிசாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து பேசியபோது வன்னிமாவட்ட NPP உறுப்பினர் மூலமாகத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எவரும் கூறியதில்லை.  


ஆனால் ரவுப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பிரதமர் ஹரிணியை சந்தித்து பொத்துவில் கல்வி வலயம் பற்றி பேசியபோது அதனை அம்பாறை மாவட்ட NPP பிரதிநிதி மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். 


இதிலிருந்து இவர்களது மனோநிலையினை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.  


எதிர் தரப்பில் உள்ளவர்கள் கோரிக்கை வைப்பதானது ஒரு வேலையை செய்விப்பவர்களாகவும், அதேநேரம் ஆளும் தரப்பில் உள்ளவர்கள் அதனை செய்பவர்களாக இருப்பார்கள். 


எதிர்த்தரப்பினர் கோரினார்கள் என்பதற்காக எதிர்த்தரப்பு மூலமாக குறித்த வேலைகளை அரசாங்கம் முன்னெடுப்பதில்லை. 


யார் கோரினால் நமக்கென்ன, எமது பிரதேசத்தில் நல்லது நடந்தால் போதும் என்ற பக்குவமான மனோநிலை வளர்வது கடினம். 


இதனை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. நல்ல மனோநிலை வேண்டும். 

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments