கல்முனை மாநகர சபையினால் மருதமுனை ஸம் ஸம் வீதி 11ஆம் குறுக்குத் தெரு விஷேடமாக புனரமைப்பு; நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
நீண்ட காலமாக போக்குவரத்துக்கு பொருத்தமற்ற வகையில் மோசமான நிலையில் காணப்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியின் 11ஆம் குறுக்குத் தெரு கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீதி நேற்று வியாழக்கிழமை (31) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் பங்குபற்றுதலுடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜூன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இவ்வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.
மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கும் மசூர் மௌலானா வீட்டுத் திட்டத்திற்கும் நடுவே செல்லும் இந்த பாதையானது ஸம் ஸம் வீதியையும் மசூர் மெளலானா வீதியையும் இணைப்பதுடன் மையவாடி, பாடசாலை மற்றும் மைதானம் போன்றவற்றுக்கு நேரடியாக செல்வதற்கான முக்கிய வீதியாகவும் இருக்கிறது.
மேலும் மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்த் தாங்கி அமைந்துள்ள நிலையில் இந்தப் பாதையிலேயே 06 இடங்களில் நீர் விநியோக பரிசோதனைக் குழிகள் (Chember) அமைக்கப்பட்டுள்ளன. இவை வீதியின் மட்டத்தில் இருந்து உயர்வாகக் காணப்பட்டதால் அவை வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்து வந்தன.
இந்த நிலையில், பொது மக்களின் வேண்டுகோளின் பேரில், கிரவல் வீதியாக காணப்பட்ட இந்தப் பாதையானது சேம்பரின் மட்டத்திற்கு போதியளவு உயர்த்தப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டதன் மூலம் குறித்த பாரிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.
இதற்கான கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments