மதுரங்குளி எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மதுரங்குளி எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் தரம் ஒன்பதை சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் தமது ஆசிரியர்கள் சகிதம் புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்துக்கு வியாழக்கிழமை (24) காலை கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர் .
பொது நூலகத்துக்கு வருகை தந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பிரதம நூலகர் கே.எம்.நிசாத் உட்பட நூலக ஊழியர்கள் குழுவினர் அன்போடு வரவேற்றனர்.
புத்தளம் பொது நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தளம் மாநகர சபையின் சபா மண்டபம், நூலகத்தின் சிறுவர் பகுதி, நூல் இரவல் மற்றும் உசாத்துணைப் பிரிவுகள் என்பனவற்றை மாணவர்கள் பார்வையிட்டதோடு, குறிப்பிட்ட இந்த பிரிவுகளின் சேவைகள் மற்றும் நூலக தகவல் சாதனங்கள் தொடர்பாகவும், நூலக தகவல் சாதனம் வகைப்படுத்தும் முறை பற்றியும், நூலக தகவல் சாதனங்களில் இருந்து எவ்வாறான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளும் பொது நடைமுறைகள் தொடர்பாகவும் பிரதம நூலகரினால் தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
No comments