ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மை குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பாக ஆராயும் வட்டமேசை கலந்துரையாடல்.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மை குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பாக ஆராயும் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று புத்தளம் கச்சேரி வீதியில் அமைந்துள்ள ஐஸ் டொக் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையமானது சிறுபான்மை உரிமைகள் குழு சர்வதேசத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரணையோடு "இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்துக்காக சிறுபான்மையினரை வலுவூட்டல்" என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு கீழ் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் ஓரம் கட்டப்பட்ட சிறுபான்மை குழுக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த வட்டமேசை மாநாட்டினை கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மைய நிறைவேற்று பணிப்பாளர் புகாரி முஹம்மத் (எல்.எல்.பி) தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானதோடு அவரே பிரதான வளவாளராகவும் கலந்து கொண்டார். இதேவேளை புத்தளம் திட்ட இணைப்பாளர் சுபியாணி பாறூக், திருகோணமலை திட்ட இணைப்பாளர் ஆஷிக் அலாப்தீன், மன்னார் திட்ட இணைப்பாளர் வடிவேல் ரஞ்சன் ஆகியோரும் இந்நிகழ்வை வழி நடாத்தினார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹ்மத், பிரதி மேயர் நுஸ்கி நிசார், வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் என்டன் சுதீஸ, சிலாபம் நகர சபை உறுப்பினர்களான டீ.விந்தியா ருஷ்யாந்தி, ஜே.ஏ.மஞ்சுள பிரசங்க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற சமூகங்களுக்குள் நலிவுற்ற நிலையில் இருக்கின்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்கு பற்றுதல் மற்றும் அவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிறுபான்மை சமூக குழுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரும் இந்த வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக காணப்படுகின்றன ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுபான்மை குழுக்களுடைய பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளக ஆட்சிக்கான அரசியல் தளத்தில் பங்குபற்றுவதற்குள்ள சமூக மற்றும் தனிப்பட்ட சவால்கள் அல்லது தடைகள் அவர்களது தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகள் ஆகியன அந்த அந்த குழுக்களின் பிரதி நிதிகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டதோடு எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளால் அவை எவ்வாறு களையப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்பது பற்றியும் இந்த பிரச்சினைகளுக்கான நீடித்திருக்கக் கூடியதும் சாத்தியமானதுமான நேர்மறை தீர்வுகளுக்கான முயற்சிகளை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இக்குழுக்களையும் இணைத்துக் கொண்டு எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதான மொழி பெயர்ப்பாளராக புத்தளம் நகரின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் நாசிர் கலந்து கொண்டார்.
No comments