புத்தளம் நெடுங்குளம் விவசாய சங்கத்தின் நிர்வாக குழுவினர்களுக்கும், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாத் அஹ்மத் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நெடுங்குளம் விவசாய சங்கத்தின் நிர்வாக குழுவினர்களுக்கும், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாத் அஹ்மத் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் புத்தளம் ஹஸனாத் மஸ்ஜிதில் இடம்பெற்றது.
சங்கத்தின் பொருளாளர் முகஹம்மது அஸ்வானினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் அதன் செயல்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
புத்தளம் மாநகர சபையின் முதலாவது வேலை திட்டமாக மேயர் அவர்களின் தலைமையில் அவர்களது உறுப்பினர்களும் இணைந்து புத்தளம் நெடுங்குளத்தின் அணைக்கட்டினை சிறந்த முறையில் துப்புரவு செய்து தந்தமைக்காக சங்கத்தின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் இதன் போது தெரிவிக்கப்பட்டன.
நெடுங்குளத்தையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்து பராமரித்து கல்வி கலை கலாசாரத்துடன் கூடிய பொழுதுபோக்கு தளமாக மாற்றி அமைப்பது தொடர்பில் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட 11 அம்ச கோரிக்கை கொண்ட மகஜர் ஒன்றும் செயலாளரினால் மேயரிடம் கையளிக்கப்பட்டது.
குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை கொட்டுதல், மிருக எச்சங்களை வீசி விட்டுச் செல்லுதல், போதைப்பொருள் பாவித்தல் போன்ற பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுவது பற்றியும் அவற்றை தடுத்து நிறுத்துதல் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அங்கு கருத்து தெரிவித்த மேயர் ரின்சாத் அஹ்மத்,
இந்த நெடுங்குளத்தையும், அதன் சுற்றுச் சூழலையும் சிறந்த முறையில் பாதுகாத்து சகல அம்சங்களுடன் கூடிய ஒரு சிறந்த முன்மாதிரி மிக்க பொழுதுபோக்கு தளமாக மாற்றுவதற்கு தான் உறுதி பூண்டுள்ளதாகவும், தன்னால் முடிந்த அளவு அதனை கட்டம் கட்டமாக நிறைவேற்றி தருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் புத்தளம் மாநகர சபைக்கு இருக்கின்ற வேலைப்பளு தொடர்பிலும் ஆளணி மற்றும் இயந்திர பற்றாக்குறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
நெடுங்குளத்தின் சூழலை தொடர்ந்து பராமரிப்பதில் மாநகர சபையுடன் இணைந்து நெடுங்குளம் விவசாய சங்கத்தின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
அதில் ஒரு அங்கமாக தற்போது மாநகர சபையினால் அழகான முறையில் சுத்தம் செய்யப்பட்டுள்ள மாரியம்மன் கோயில் சந்தி முதல் வான் சந்தியூடாக ஹசனாத் பள்ளி வரையிலும் உள்ள குளக்கட்டினை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலேனும் தொடர்ந்து சுத்தம் செய்து பராமரித்து தருமாறும் சங்கத்தை வேண்டிக் கொண்டார்.
அவ்வாறு துப்புரவு செய்யும்போது ஏற்படும் குப்பை கூலங்களை மாநகர சபையின் மூலம் ட்ரெக்டர் இயந்திரம் மூலம் அகற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரம் தொடர்ந்தும் தான் நெடுங்குளம் சங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கும் அதற்காக இந்த சங்கத்தின் ஒத்துழைப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் வேண்டிக் கொண்டார்.
No comments