சேதமடைந்த புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம் உடனடியாக புணரமைக்கப்படவேண்டும். புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஷதா பாயிஸ், சபை அமர்வில் தனது கன்னி உரையில் தெரிவிப்பு.
எம்.யூ.எம்.சனூன்
"கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளி காற்றினால் சேதமடைந்த புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தின் திருத்தப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என புத்தளம் மாநகர சபையின் உறுப்பினரும், முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் புதல்வியுமான ஷதா பாயிஸ் தெரிவித்தார்.
புத்தளம் மாநகர சபையின் மாதாந்த முதலாவது சபை அமர்வு திங்கட்கிழமை (30) காலை புத்தளம் பொது நூல் நிலையத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் நடைபெற்ற போது தனது கன்னி உரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்சாத் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் ஷதா பாயிஸ் மேலும் உரையாற்றுகையில்,
இவ்வாறு இந்த ஞாபகார்த்த மண்டபத்தினை புணரமைப்பு செய்வதன் மூலம் சபைக்கு வருங்காலத்தில் வருமானத்தையும் வெகுவாக ஈட்டி கொள்ள முடியும்.
இத்தகைய உயரிய ஒரு சபைக்கு நான் வந்ததற்கான முதன்மை காரணம் எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களே ஆகும். இதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமைக்கும், எனது குடும்பத்தாருக்கும் வாக்காளர்களுக்கும் எனது நன்றிகளை உணர்வு பூர்வமாக தெரிவிக்கின்றேன்.
மாநகர சபை அமர்வுகளை நேரலை செய்யும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது முன்னர் எனது தந்தையின் தலைமையில் நடைமுறைக்கு வந்தது. தற்போது உள்ள சபையும் இதனை தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.
சபை அமர்வுகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மொழி மாற்றும் வசதியை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மொழி சுதந்திரம் ஏற்படுவதுடன், மக்கள் அனைவருக்கும் சபையின் நடவடிக்கைகள் தெளிவாக புரிந்து கொள்ளும் ஒரு சூழல் உருவாகும்.
புத்தளம் மாநகர சபையில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடன் முன்னெடுக்கவுள்ள எனது செயற்பாடுகளுக்கு சகல அங்கத்தவர்களும் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என தெரிவித்தார்.
No comments