தேசிய மக்கள் சக்தி பிரதிநிதியினால் கராத்தே தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச சபையின் ரத்மல்யாய வட்டாரப் பிரதிநிதி தேசிய மக்கள் சக்தியின் கியாஸ் இஸ்ஸதீன் தலைமையில், ரத்மல்யாய தேசிய மக்கள் சக்தி வட்டார சபை மற்றும் நலன் விரும்பிகளினால் கராத்தே தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் (18) புத்தளம் ரத்மல்யாயவில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் மாநகர சபை மேயர் ரின்ஷாட் அஹ்மட், தனது மாணவப் பருவத்தில் தற்காப்புக் கலை பயிற்சி பெற்றதை நினைவுகூர்ந்ததோடு,
“விளையாட்டுக்கள் குறிப்பாக தற்காப்புக் கலைகள் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும். இன்று ஆரம்பித்த காராத்தே தற்காப்புக் கலை பயிற்சியை இடைவிடாமல் தொடர்ந்து தரப் பட்டிகளைப் பெற்று பல்வேறு மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை சுவீகரிப்பதோடு ரத்மல்யாய கிராமத்தில் தேசிய மட்ட தற்காப்புக் கலை வீரர்கள் உருவாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
புத்தளத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் Washi Shotokan Karate Association (WSKA) தலைவரும் போதனாசிரியருமான ஷெஹான் எம். பைரோஸ் தற்காப்புக் கலை பயிற்சிகளை நடத்துகின்றார்.
ரத்மல்யாய கிராமத்தின் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள், ரத்மல்யாய 04 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அஹதியா மண்டபத்தில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments