Breaking News

“ஈரானிய வரலாற்றை அறிந்தவர்கள் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள்” என்ற சுப்ரீம் லீடரின் கருத்துக்கு பொருள் என்ன ?

பண்டைய உலகில் “பாரசீகம்” என்று அழைக்கப்பட்ட தேசம்தான் 1935 க்கு பின்பு “ஈரான்” என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. உலகிற்கு சிம்ம சொற்பனமாக இருந்து பண்டைய வரலாற்றில் முதன்மை பேரரசாக பாரசீக (ஈரான்) சாம்ராஜ்யம் (Persian Empire) இருந்தது.  


உலகின் மிகவும் வலிமையான பாரசீக சாம்ராஜ்யத்தினை வீழ்த்துவதற்கு ஒவ்வொரு காலகட்டங்களிலும் வெவ்வேறு படையெடுப்புக்கள் இடம்பெற்றது. 13ம் நூற்றாண்டில் மங்கோலியர்களும் படையெடுத்தனர். 


ஆனால் எந்த படையெடுப்பினாலும் பாரசீக சாம்ராஜ்யத்தினை வீழ்த்த முடியவில்லை. மஹா அலக்சாண்டரின் படையெடுப்பு உலக வரலாற்றில் முக்கிய போராக கருதப்படுகின்றது. 


இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஹலீபாவாக விளங்கிய உமர் (ரலி) அவர்களின் ஆட்சியிலேயே பாரசீக சாம்ராஜ்யம் முழுமையாக வீழ்ந்ததுடன், ஈரான் முழுவதும் இஸ்லாம் பரவியது.  


1789 தொடக்கம் 1979 வரையில் ஈரானில் கஜார் மற்றும் பஹ்லவி ஆட்சியில்  மேற்கு நாடுகளால் பொருளாதார வள சுரண்டல்கள் நடைபெற்றது. 


1925ல் முகம்மது ரெசா பஹ்லவி ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளால் பெரிதும் விரும்பப்பட்டார். இவரது ஆட்சியில் பாரம்பரிய இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க முயற்சித்தபோது 1979 இல் அயத்துல்லா ருஹுல்லா கொமைனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்று வெற்றியடைந்தது. 


இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு மன்னர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அன்றிலிருந்து ஈரானை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து வள சுரண்டல்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பெரிதும் முயற்சித்து வருகின்றது.  


1979 இல் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் புரட்சியானது ஈரானிய மக்களின் சுய கௌரவத்தையும், நீதியையும், இஸ்லாமிய, தனித்துவ கலாச்சாரத்தினையும் அடிப்படையாகக் கொண்டது.   


1980 தொடக்கம் 1988 வரைக்கும் ஈராக் என்ற பெயரில் வல்லாதிக்க சக்திகளுடன் எட்டு வருடங்கள் எந்தவித உதவியுமின்றி தனித்துநின்று போரிட்டனர். 


மேற்குலகின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் இராணுவ படை கட்டமைப்பு, ஆயுத தளபாட உற்பத்திகள், நவீன ஏவுகணை தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றில் உன்னத வளர்ச்சியினை ஈரான் அடைந்துள்ளது. 


1979 இல் இருந்து இன்று வரைக்கும் ஈரானில் இருக்கின்ற இயற்கை வளங்களை மேற்கு நாடுகள் சுரண்டுவதற்கு அனுமதித்ததில்லை. அத்துடன் மேற்குலகின் அடிமையாக ஈரான் இருந்ததுமில்லை. 


வரலாற்றுக் காலம் தொட்டு பின்வாங்காமல் தனித்துநின்று வீரத்துடன் போரிட்டு எதிரிகளை வீழ்த்துவதில் ஈரானியர்கள் நன்கு வல்லமையும், அனுபவமும் உள்ளவர்கள். இதனாலேயே ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், ஈரானிய வரலாற்றை அறிந்த அறிவுள்ள மக்கள் இந்த தேசத்துடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள் என்றும் ஈரானிய ஆன்மீக தலைவர் கூறியுள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாம்.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments