Breaking News

உலக வல்லாதிக்கத்துக்கு எதிராக தனித்துநின்று போரிடும் ஆற்றல் ஈரானுக்கு உள்ளதா ? ஈரான்-ஈராக் போர் கற்றுத்தந்த பாடம்.

வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக தனித்து நின்று போரிடுவதென்பது ஈரானுக்கு புதிய விடயமல்ல. 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் பின்பு 1980 இல் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைனை ஒரு கருவியாகப் பாவித்து ஈரானுக்கு எதிராக மேற்குலகம் போர் தொடுத்தது.  


இந்த போரை ஈரான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது புதிதாக ஆட்சிக்கு வந்த அயத்துல்லா ரூஹுல்லா கொமைனி தலமையிலான ஈரானின் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் போதிய இராணுவ வல்லமையும், நவீன ஆயுதங்களும் இருக்கவில்லை. அத்துடன் சர்வதேச உறவுகளும், செல்வாக்குகளுமின்றி தனித்து நின்றனர்.    


சதாமின் படையெடுப்பினால் ஈரானின் குஸ்தன், அழாஸ் பகுதிகள் மற்றும் தென் ஈரானில் சில பகுதிகளை ஈராக்கிய படைகள் கைப்பற்றியது. ஆனாலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு ஈரானியர்கள் மனம் தளராமல் போரிட்டனர். 


ஈரானுக்கு எதிரான இந்த போரில் சதாம் ஹுசைனுக்கு பின்னால் அமெரிக்கா தலமையிலான மேற்குலகும், அரபு நாடுகளும் பக்கபலமாக இருந்து இராணுவ, பொருளாதார உதவிகளை செய்தது.  


இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஈரானிய மக்களின் முழுமையான ஆதரவுடன் மூர்க்கமாக போரிட்டு ஆரம்பத்தில் இழந்த நிலங்களை மீட்டெடுத்தனர்.  


ஈரான் – ஈராக் போரில் சிரியா மாத்திரமே ஈரானுக்கு வெளிப்படையாக உதவி செய்தது. பாகிஸ்தான் ஈராக்கின் நட்பு நாடாக இருந்ததன் காரணமாக மிக ரகசியமாக ஈரானுக்கு பாகிஸ்தான் உதவியது. வேறு எந்த நாடுகளும் உதவ முன்வரவில்லை. 


இந்த போரினை தங்களுக்கு படிப்பினையாகக்கொண்டு கட்டம் கட்டமாக போரிட்டுக்கொண்டே ஈரான் தன்னை பலப்படுத்திக்கொண்டது. எட்டு வருடங்களின் பின்பு முடிவுக்கு வந்த இந்த போரில் மேற்குலகமும், அரபு நாடுகளும் பாரியளவில் உதவி செய்திருந்தும் இறுதியில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. 


எட்டுவருட போரில் இரு தரப்பிலிருந்தும் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்தனர். பொருளாதார இழப்புக்கள் ஏராளம். 


அப்போதிருந்த சூழ்நிலைபோன்று இப்போதில்லை. இன்று அனைத்து துறைகளிலும் உன்னத வளர்ச்சியடைந்த ஈரான் மீது மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேலினால் ஆரம்பிக்கப்பட்ட போரினால் விமான தாக்குதல்கள் மற்றும் உளவாளிகள் மூலமாக சேதத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஈரானை தோல்வியடைய செய்யவோ, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவோ, ஈரானின் நிலங்களை கைப்பற்றவோ முடியாது. தனித்து நின்று போரிட்ட நீண்ட அனுபவம் ஈரானுக்கு உள்ளது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments