புத்தளம் மாநகர சபை மேயர் பதவி சம்பந்தமாக பரப்பப்படும் வதந்திகளுக்கு சபை உறுப்பினர் ஷதா பாயிஸ் விளக்கம்.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மாநகர சபையின் கௌரவ உறுப்பினராக எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நான் நியமிக்கப்பட்டதன் பின்பிருந்து எனது பெயரை ஒரு கட்சியை சார்ந்த சிலர் "மேயர்" பதவிக்காக இரண்டு வருடங்கள் என்னை பிரேரிக்கவுள்ளதாக சமூக மற்றும் தேசிய ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதன் முழுமையான நோக்கம் எங்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தங்களுடைய மேயர் வேட்கைக்கு தீனி போட்டுக் கொள்வதேயாகும் என்பதை அப்பட்டமாக எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
எம்மை இந்த தேர்தலில் தோற்கடிக்க அயராது பாடுபட்ட இவர்கள் நாம் மாநகர சபை உறுப்பினரானதன் பின்பு, அவர்களை மேயராக்க ஆதரவளிக்குமாறு எமக்கு பேரம் பேச வெளிச் சக்திகளை வைத்து முயற்சி செய்வதையும் நாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம்.
வட்டாரத்தை வெல்ல முடியாதவர்களை மேயராக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான விடயத்திற்கு நாம் ஒரு போதும் துணை நிற்க மாட்டோம் என்பதையும், "மேயர்" என்றதும் பதவிக்கு ஆசைப்பட்டு எம்மை நம்பி இந்த அமானிதத்தை கையளித்திருக்கும் எமது கட்சிக்கு ஒரு போதும் துரோகத்தை செய்ய மாட்டோம் என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதிலும் குறிப்பாக மர்ஹூம் கே.ஏ. பாயிஸின் இரத்தத்தில் இருந்து உதித்த அவருடைய புதல்வியாகிய நான் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வேன் என்று அந்த சிலர் கணிப்பிட்டது என்னோடு சேர்த்து எனது தந்தையின் நேர்மையையும் குறைத்து மதிப்பிட்டதற்கு சமமாக கருதுகிறேன்.
ஆகவே நான் சார்ந்திருக்கும் இந்தக் கட்சியின் தலைமை மற்றும் புத்தளம் மாவட்ட கட்சியின் மத்தியக்குழு அதிலும் குறிப்பாக எமது மாநகர சபைக்கான அணியின் தலைவர் கௌரவ ரணீஸ் பதுர்தீன் ஆகியோரது முடிவுகளை மதித்து இந்த அமானிதத்தை மக்களுக்கு பிரயோசனமுள்ளதாக பயன்படுத்தும் நோக்கம் மாத்திரமே எனது நெஞ்சில் நிழலாடுதேயொழிய எந்த பதவிகளுக்காகவும், பணத்திற்குகாகவும் என்னை நம்பியவர்களுக்கு ஒரு போதும் துரோகத்தை நான் செய்யத் தயாரில்லை என்பதை மிகத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments