சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பிரியாவிடையும், பாராட்டும், கௌரவிப்பும்!.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் நடாத்திய பாராட்டு, கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (25) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சியாமளாங்கி கருணாகரன், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழீல், ஒய்வு பெற்ற இசை ஆசிரியர் "வித்துவான்" ஏ.எம். அப்துல் அக்பர் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாரம்பரியக் கலையான கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான பொல்லடி மாணவர் குழுவினர் பொல்லடி அடித்து, மகத்தான வரவேற்பு வழங்கி அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் நடனம், பாடல் அபிநயம் உட்பட கலாசார நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டதோடு, கடந்த வருடம் கலாசார மத்திய நிலையத்தில் கலைப் பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் இடம்பெற்றதுடன் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் முதல் பொறுப்பதிகாரியாக இருந்து தான் பதவி வகித்த காலத்தில் சிறப்பாகச் சேவையாற்றிய மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் அவர்களின் 31.05.2025 திகதிய வெளிநாட்டு விடுமுறையை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து அதிதிகளும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது 2024ஆம் ஆண்டு கற்கை நெறியினை பூர்த்திசெய்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களான உதவி தலைவர் எம்.ஐ.எம். அஷ்ரப், செயலாளர் கலைஞர் எஸ்.எம். அஸ்வான் மௌலானா, உதவிச் செயலாளர் ஊடகவியலாளர் யூ.எல். நூருல் ஹுதா, பொருளாளர் எம்.எச்.ஏ. ஹபீல், மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்களான ஏ.பி. நௌஸாத், ஊடகவியலாளரும் ஊடக ஒருங்கிணைப்பாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிர், மருதூர் என்.எம். அலிக்கான், அண்ணாவியார் எம்.ஐ. அலாவுதீன், ஆசிரியரும் பாடகருமான எம்.ஜி.எம். மாஹிர், ஏ.எம்.எம். காமில் முஹ்ஸீன் ஆகியோரினால் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு, மருதம் கலைக்கூடல் மன்றத்தினாலும் அதன் தலைவர் கலைஞர் அஸ்வான் மௌலானாவினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மிகக் குறுகிய காலத்தில் சாய்ந்தமருதில் கலாசார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சித்திரம் நடனம், கிராமிய சங்கீதம், களிகம்பு போன்ற பாரம்பரிய கலாசார பாட நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டு, அதில் வருடாந்தம் பிரதேசத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்மையடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மத்திய நிலையத்தின் வளவாளர்கள், பிரதேசத்தின் முக்கியமான கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வை ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
No comments