Breaking News

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.

எட்டாவது தொடர்......

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற தினத்திலிருந்து பின்பு நடைபெற்ற விசாரணைகள், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், அரசியல் முக்கியஸ்தர்களின் கருத்துக்கள் போன்றவற்றின் அடிப்படையை ஆதாரமாகக்கொண்டு இந்த தொடர் கட்டுரை எழுதப்பட்டது. 


அனைத்து தரப்புக்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்தால் ஈஸ்டர் தாக்குதலுக்கு சஹ்றான் குழுவினர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனைத்தான் கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கவும் கூறியிருந்தார். 


ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தி அப்பாவிகளை ஏன் கொலை செய்தார்கள் என்பதிலும், தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்செல்லக்கூடிய சூழ்நிலைகள் இருந்தும் ஏன் தற்கொலை தாக்குதலை நடாத்தி தலைவர் உட்பட அனைவரும் உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்பதில்தான் குழப்பம் உள்ளது.  


இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்தில் TMVP தலைவர் பிள்ளையானுக்கு இதில் சம்பந்தம் உள்ளதாக கூறியுள்ளார். 


பிள்ளையான் சிறைக்குள் இருந்தபோது அங்கு சஹ்றான் குழுவினருடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு காரணமாக அங்கிருந்து தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நடைபெற்றதாகவும், அத்துடன் பிள்ளையானின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆசாத் மௌலானா மூலமாக தென்னிலங்கை அரசியல் உயர்மட்டத்திற்கு இந்த திட்டங்கள் பற்றி தெரியப்படுத்தப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.  


ஏனெனில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெறாமல் சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் வெளியே வரமுடியாத நிலை இருந்தது. அத்துடன் ஆட்சியை கைப்பற்றுவதென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் என்ற பிரச்சாரத்திற்கு இவ்வாறான தாக்குதலின் தேவைப்பாடு சந்தேகப்படுகின்ற அரசியல் தரப்பிற்கு தேவைப்பட்டிருக்கலாம்.  


மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் அனுசரணையில் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பொதுபலசேனா இயக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக சஹ்றான் குழுவினர் கடும்போக்குவாதிகளாக உருவாகுவதற்கு காரணமாக இருந்துள்ளார்கள். இதைத்தான் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் கூறுகிறது. 


2018  இல் கண்டி, திகன கலவரத்தின் பின்பு “”உங்களை பழிவாங்குவோம்”” என்று சஹ்றான் அறிக்கை விடுத்ததானது சிங்கள சக்திகள் மீது தாக்குதல் நடாத்துவோம் என்று எடுத்துக்கொள்ளலாம். 


பன்சலை மற்றும் பௌத்த நிலையங்கள் போன்ற இடங்களில் சிங்களவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்துவதற்கு சஹ்றான் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் இதனை தென்னிலங்கை அரசியல் சக்திகள் தாக்குதல் திட்டத்தினை திசைதிருப்பி அதனை அப்பாவி கிறிஸ்துவ மக்கள்மீது பிரயோகித்திருக்கலாம். 


ரகசியமாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலானது பல உயர்மட்டங்களுக்கும் தெரியவந்ததன் காரணமாக இறுதி நேரத்தில் இலக்குகளையும், திட்டங்களையும் மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். 


இவ்வாறான கடும்போக்குவாதிகள் உயிருடன் இருப்பது நாட்டுக்கு ஆபத்து என்பதனால் குண்டுகளை வைப்பதற்காக சென்றவர்கள்மீது ரிமோட் கொன்ரோல் மூலம் தூரநின்று வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது தாக்குதலுக்கு பின்பு உயிர் வாழ்வது ஆபத்து என்று கருதி இவர்களே தற்கொலை செய்திருக்கலாம். 


எது எப்படி இருப்பினும் சிங்கள மக்களை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றிருந்தால், 1983 இல் தமிழர்களுக்கெதிரான ஜூலை கலவரத்தில் தமிழர்களும் அவர்களது சொத்துக்களும் அழிக்கப் பட்டதையும்விட அதிகமான வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


இந்த கட்டுரையில் “”லாம்...”” என்று குறிப்பிட்டிருப்பது எனது சந்தேகத்தை குறிக்கிறது. நுனிப்புல் மேய்கின்ற எம்மவர்கள் ஆழமான கருத்துக்களை புரிவதில்லை. இந்த கட்டுரை தொடரில் உங்களுக்கு முரண்பாடுகள் இருந்தால் விட்டுவிடுங்கள். அதாவது எனது கட்டுரையை நம்பத்தேவையில்லை. 


இத்துடன் இந்த தொடரை இன்னும் நீடிக்காமல் நிறைவு செய்கிறேன்.

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments