மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு; பயங்கரவாத தடுப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை இன்று வியாழக்கிழமை (01) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அவர் பல விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் கட்டத்தில், குறிப்பாக அமெரிக்காவின் எதிர்பாராத உயர்வு வரி விதிப்புகளின் மத்தியில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவது மிக அவசியமானது என்பதை எமது கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
இருப்பினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சில விடயங்களில் நடந்து கொள்ளும் விதம் கவலைக்குரியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைத் தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துச் செல்லும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
புதிய சட்டம் அமுலுக்கு வரும் வரை, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படக் கூடாது., ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மாத்திரம் ஒரு விதிவிலக்கு இருக்கலாம்.
பயங்கரவாதத் தடுப்பு சட்டமானது கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டிக்கிறோம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞனை கைது செய்து, தடுத்து வைத்ததை ஏற்க முடியாது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக உரிய இளைஞனிடம் அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும்.
அத்துடன் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப அங்கு கட்சி தலைமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கட்சியின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையாகவே எந்தக் கட்சியை சேர்ந்தவர்களோ அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக சபாநாயகர் ஏற்க மறுப்பதை சுட்டிக்காட்டிய செயலாளர் நிசாம் காரியப்பர், இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
No comments