ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.
இரண்டாவது தொடர்.....
ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்பு “இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்கள்தான் பொறுப்பு” என்றும், “இன்னும் பல நாடுகளில் தாக்குதல் நடாத்த உள்ளோம்” என்றும் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் பக்தாதி அவர்கள் சிரியாவில் இருந்தவாறு அறிவித்ததனை தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
சஹ்ரானுக்கு பின்பு அடுத்த தலைவராக நியமிக்கப்பட்ட மில்ஹான் என்பவர் சவூதி அரேபியாவில் இருந்த ஐ.எஸ் இயக்க தலைவர்களை தொடர்புகொண்டு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு கெஞ்சியதன் காரணமாக ஐ.எஸ் இயக்கம் அதனை பொறுப்பேற்றதாகவும் செய்தி வெளியாகியது.
அதேநேரம் ஈஸ்டர் தாக்குதலுக்கும், ஐ.எஸ் இயக்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று இந்த தாக்குதல் பற்றிய விசாரணையை மேற்கொண்ட சாணி அபேகுணசேகர அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஐ.எஸ் க்கு இதில் சம்பந்தம் இல்லையென்று சாணியால் உறுதியாக கூற முடியுமென்றால், இதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யாரென்று அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.
ஆனால் இது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதென்று தெரியவில்லை. ஏனெனில் இறுக்கமான கொள்கைகளை கடைப்பிடுத்துவருகின்ற ஐ.எஸ் இயக்கத்தின் கொள்கைகளுக்கு இது முரணான விடயமாகும். யாரோ நடத்துகின்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்குமா என்பது கேள்விக்குறியாகும்.
அத்துடன் கெஞ்சியதன் காரணமாக ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்று அறிக்கை விட்டதென்பது நகைச்சுவையாக பார்க்கப்படுகின்றது.
“ஈஸ்டர் தாக்குதலுக்காக பெரும்தொகை பணத்தினை செலவழித்துள்ளனர். அந்த பணத்தினை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசினை உருவாக்குவதே அவர்களின் நோக்கம்” என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.
பகுத்தறிவு ரீதியாக ஆராய்ந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அன்றாடம் சாப்பிட வசதியின்றியும், கல்வியறிவு இல்லாமலும், குடும்ப உறுப்பினர்களை இழந்து விரக்தி நிலையிலும் வாழ்ந்தவர்கள் அல்ல. மாறாக கல்வி கற்று நன்றாக சிந்திக்கும் ஆற்றலும் பொருளாதார வசதியும் உள்ளவர்கள்.
இவர்கள் பணத்துக்காக கூலிக்கு இந்த நாசகார செயலில் ஈடுபட்டிருந்தால், மரணத்திற்கு பின்பு அந்த பணங்களை எவ்வாறு அனுபவிப்பது ? யார் அனுபவிப்பது ? பணம் இருந்து என்ன பயன் ? என்று சிந்திக்க தெரியாதவர்களாக கொலையாளிகள் இருந்திருப்பார்களா ?
தற்கொலை தாக்குதல் நடாத்துவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உலகிற்கு தற்கொலை குண்டுத் தாக்குதலை ஹமாஸ் இயக்கம் அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிராக இமாம்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாகவே அதனை ஹமாஸ் அமைப்பு கைவிட்டது.
அத்துடன் போர்க்களத்தில்கூட பொதுமக்களை கொலை செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது என்பது மார்க்கம் கற்ற கொலையாளிகளுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
அல்லது அப்போது ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா, ஈராக் பிரதேசங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தொடர் விமான தாக்குதல்களினால் நாளாந்தம் நூறுக்கணக்கான இஸ்லாமிய பொதுமக்கள் கொலை செய்யப்பட்டார்கள். நேட்டோ படைகள் கிறிஸ்தவர்கள் என்பதனால் அவர்களை பழி தீர்க்கும் பொருட்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்களா ?
அவ்வாறு பொது மக்களை பழி தீர்ப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளதா ? ஏனெனில் தற்போது காசாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பொது மக்கள் யூத இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டுவருகின்ற நிலையில், அதற்கு பழி தீர்க்கும் பொருட்டு யூத பொது மக்களை இலக்கு வைத்து ஹமாஸ் அமைப்பும், ஏனைய சக்திகளும் எந்தவித தாக்குதலும் இதுவரையில் நடாத்தவில்லை.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments