Breaking News

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.

மூன்றாவது தொடர்........

ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய குழுவுக்கு சஹ்றான் ஹாசிமி தலைவர் என்று கூறப்படுகின்றது. தாக்குதலுக்கு பின்பு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாம் கட்ட தற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தவர்களும் அடங்குவர் என்றும் அப்போது கூறப்பட்டது. அப்படியென்றால் இயக்கத்தின் தலைவர் ஏன் முதலாம்கட்ட தாக்குதலுக்கு சென்று தற்கொலை செய்தார் ? 


உலகில் எந்தவொரு இயக்கத்தின் தலைவர்களும் முதலில் சென்று தற்கொலை தாக்குதலை நடாத்தியதாக வரலாறுகள் இல்லை. தலைவர் என்பவர் இயக்கத்தை கட்டியமைத்து தளபதிகளையும், போராளிகளை வழிநடாத்துபவர். 


இங்கே தலைவர் என்பதும், தளபதி என்பது வெவ்வேறானது என்பதனை நீங்கள் அறிந்திருக்க வேண்டியதொன்றாகும். தளபதிதான் களத்தில் நின்று போராளிகளை வழிநடாத்தி போர் புரிபவர். ஆனால் தலைவர் என்பவர் தளபதிகளை வழிநடாத்துபவர்.  


இங்கே இயக்கத்தின் தலைவரான சஹ்றான் தற்கொலை தாக்குதலுக்கு முதலில் செல்கின்றபோது தான் மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்பதனை நன்கு அறிந்திருப்பார். 


தனது மரணத்திற்கு பின்பு இயக்கத்தை வழிநடாத்துவதற்கு அடுத்த தலைவராக மில்ஹான் என்பவரை சஹ்ராணினால் நியமித்துவிட்டு சென்றதாக கூறப்படுவதானது புதுமையான விடயம் மட்டுமல்லாது இதனை எந்தளவுக்கு நம்பக்கூடியதென்று தெரியவில்லை. 


இயக்கங்களை உருவாக்கிய தலைவர்களின் மரணங்களுக்கு பின்பு உலகில் பல இயக்கங்கள் இலக்கை அடைய முடியாமல் அழிந்துபோன வரலாறுகள் உள்ளது. 


கட்டியமைக்கப்பட்ட இயக்கமானது தனது மரணத்திற்கு பின்பு இலக்கை அடைய முடியாமல் அழிந்துபோனால் தான் தற்கொலை தாக்குதல் மூலம் மரணிப்பதற்கு என்ன அர்த்தம் உள்ளது என்று சஹ்றான் சிந்திக்காமல் இருந்திருப்பாரா ? அத்துடன் இவர்களது இலக்கு என்ன என்ற கேள்விக்கும் விடை இல்லை.  


தலைவராக இருந்த சஹ்றான் இறுதியில் தளபதியாகவும் இல்லாமல் ஒரு சாதாரண தற்கொலை போராளியாக மாறினாரா ? 


இதற்கிடையில் தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்களுக்கு பின்பு யாரும் எதிர்பாராதவிதமாக ஓர் அதிர்ச்சியான செய்தியும், திருப்பமும் 2023 காலப்பகுதியில் வெளியானது. 


அதாவது கோட்டபாய ராஜபக்ஸ, பிள்ளையான், புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டார்கள் என்று பிள்ளையானின் நம்பிக்கையான செயலாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் அப்போது செயற்பட்டுவந்த ஆசாத் மௌலானா அவர்கள் சேனல் 4 ஆவணப்படத்தில் குற்றம்சாட்டியதானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அதுவே கிடப்பில் கிடந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை பேசுபொருளாக மாற்றியுள்ளது. 


சேனல் 4 ஆவணப்படத்துக்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முறைப்பாடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசாத் மௌலானா சமர்ப்பித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.  


ஆசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலம் உண்மையென்றால் ஈஸ்டர் தாக்குதலில் இவருக்கும் நேரடித் தொடர்புள்ளது என்றுதான் கூற வேண்டும். 


ஏனெனில்....

தொடரும்............


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments