ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.
ஐந்தாவது தொடர்........
ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஈஸ்டர் தாக்குதல் பற்றிய துல்லியமான தகவல்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியதாக கூறப்படுகின்றது. ஒரு சக்தியுள்ள பிராந்திய வல்லரசு நாட்டின் புலனாய்வுத்துறை வழங்குகின்ற தகவல்களை சாதாரணமாக தட்டிக் கழித்துவிடுவதில்லை.
விடுதலை புலிகளுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் புலிகளின் நடமாட்டங்கள் மற்றும் புலிகளின் ஆயுத கப்பல்களின் போக்குவரத்துகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிக்கொண்டிருந்தது.
இவ்வாறான இந்தியாவின் உதவியினால் புலிகளின் கப்பல் மூலமான ஆயுத விநியோகங்களை இலங்கை கடற்படையினரால் குறிப்பிட்டளவில் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது.
யுத்த காலத்தில் இந்திய புலனாய்வுத் தகவல்கள் மூலமாக புலிகளை கட்டுப்படுத்த முடியுமென்றால், அதே இந்தியா வழங்கிய தகவல்கள் மூலமாக சஹ்றான் குழுவினரின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
அத்துடன் இந்த தாக்குதல் பற்றிய ரகசியங்களை இந்திய தூதுவராலயத்திலிருந்து முன்கூட்டியே இலங்கைக்கு வழங்கிய இந்திய புலனாய்வு அதிகாரியை ஏன் விசாரணை செய்ய முயற்சிக்கவில்லை ? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றது.
இந்த தாக்குதலுக்கு பின்னால் மோடியின் கரங்கள் இருந்ததாகவும், அப்போது இந்திய பொது தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மோடி தோல்வியடையக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்டதாகவும், அன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அப்படியென்றால் ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்தும் நோக்கில் தாக்குதல் பற்றிய ரகசியத்தை ஏன் இந்திய அதிகாரி இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் ?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முஸ்லிம்களுக்கெதிரான வேருவளை வன்முறையும் ஒரு காரணம் என்றும் அதற்கு உடந்தையாக இருந்த பொதுபலசேனா அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
2018 ல் முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறை, கண்டி, திகன கலவரம் நடைபெற்றதன் பின்பு “இதற்கு பழி தீர்ப்போம்” என்று மிகவும் ஆக்ரோசமாக சஹ்றான் ஹாசிமி பேசிய வீடியோ அன்று சமூகவலைத் தளங்களில் வலம் வந்தது. இந்த வன்முறைதான் சஹ்ரானுக்கு இளைஞர்களை திரட்டுவதற்கான சாதகமான களத்தினை உருவாக்கியிருக்கலாம்.
இங்கே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் 2018 இல் சஹ்றான் வெளியிட்ட வீடியோ போன்றவற்றை ஆராய்ந்தால், இலங்கையில் ஒரு தாக்குதலுக்கான திட்டமிடல் 2018 கண்டி, திகன கலவரத்தின் பின்பு திட்டமிடப்பட்ட ஒன்றல்ல.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments