"புத்தளம் காற்பந்தாட்ட லீக் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் வெற்றிக்கிண்ண" தொடரில் விம்பிள்டன் கழகம் சம்பியனானது.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் லெஜன்ட்ஸ் கழகத்தின் அனுசரணையில் புத்தளத்தில் நடாத்தப்பட்டு வந்த "புத்தளம் காற்பந்தாட்ட லீக் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் வெற்றிக்கிண்ண" தொடரில் புத்தளம் நகரின் மிகவும் பழைமை வாய்ந்த அணியாக திகழும் விம்பிள்டன் கழகம் சம்பியனாக மகுடம் சூடியது.
லீக் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக், லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் ஆகியோரது விரிவான ஏற்பாட்டில் இத்தொடரனது கடந்த மூன்று வாரங்களாக புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது.
புத்தளம் லீக்கில் அங்கம் வகிக்கும் 12 கழகங்கள் பங்கு பற்றிய இத்தொடரில் புத்தளம் விம்பிள்டன் கழகமும், நியூ ஸ்டார்ஸ் கழகமும் இந்த இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டி புதன்கிழமை (26) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
போட்டி ஆரம்பித்து 02 வது நிமிடத்தில் விம்பிள்டன் அணி வீரர் முஹம்மது நிப்லான் தனது அணிக்கான கோலினை செலுத்த, 14 வது நிமிடத்தில் அதே அணியின் முஹம்மது ஹம்தான் இரண்டாவது கோலினையும் செலுத்தினார்.
போட்டியின் இரண்டாம் பாதியில் நியூ ஸ்டார் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையினை அவ்வணியின் தலைவர் அவ்ஸாப் கோலாக மாற்றி நியூ ஸ்டார் அணிக்கு ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் 02 : 01 என்ற கோல் கணக்கில் விம்பிள்டன் அணி வெற்றி பெற்று சம்பியனாகியதோடு நியூ ஸ்டார்ஸ் அணி ரன்னரப்பாக தெரிவானது.
விம்பிள்டன் அணியை அவ்வணியின் முன்னாள் வீரர் சட்டத்தரணி ஏ.டபில்யூ. அஷ்ரக் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வழி நடாத்தி இருந்தார்.
தொடரின் சிறந்த கோல் காப்பாளாராக விம்பிள்டன் அணியின் கோல் காப்பாளர் முஹம்மது இம்ரான் தெரிவு செய்யப்பட்டார்.
இதே வேளை நியூ ஸ்டார்ஸ் அணியினருக்கு லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் மேலங்கி தொகுதியையும் கையளித்தார்.
No comments