Breaking News

சிரியாவை கைப்பற்றிய HDS இயக்கம் பயங்கரவாதிகளா ? சிரியா அல்-கொய்தாவுக்கு தளமாக அமையுமா ?

08.12.2024 திகதி டமஸ்கசை கைப்பற்றியதை அடுத்து சிரியாவில் பசர் அல்-அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 


27.11.2024 இல் திடீரென போர் ஆரம்பிக்கப்பட்டதென்று கூறப்படுகின்றது. எங்களது பார்வையில் அது திடீர்ரென்று தெரியலாம். ஆனால் ஒரு நாட்டை கைப்பற்றுவதென்றால் அதற்குரிய திட்டமிடல், உளவுத்தகவல், போர் ஒத்திகை, ஆயுத விநியோகம், ஆயுத சேகரிப்பு, மருத்துவ பிரிவு என இன்னும் பல ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். 


சிரியாவை கைப்பற்றும் இந்த போரை HDS இயக்கம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கு HDS தலைமையில் பத்துக்கு மேற்பட்ட பலம்பொருந்திய பிரதான இயக்கங்களும், மற்றும் குழுக்களும் ஒன்றிணைந்துதான் இந்த போரை ஆரம்பித்தனர். 


அதாவது போராளி இயக்கங்களுக்குள் ஓர் இணக்கப்பாடு இல்லாதிருந்திருந்தால் இந்த போர் நடைபெறுவதற்கோ, ஆட்சியை கைப்பற்றுவதற்கோ சாத்தியமில்லை.      


இந்த இயக்கங்களை தலைமைதாங்கிய HDS இயக்கத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாகவும் அது பயங்கரவாத இயக்கமென்றும் கூறப்படுகின்றது. ஆனால் அது சாத்தியமா என்று நாங்கள் ஆராய வேண்டும். 


ஏனெனில் நாங்கள் இலங்கையில் இருந்துகொண்டு அவர்களை பயங்கரவாதிகள் என்கின்றோம் ஆனால் சிரியா மக்கள் அவர்களை புனித போராளிகளாக மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.


HDS இயக்கத்தின் தலைவரான அபு முகம்மது ஜெலாணி என்பவர் 1982 இல் சவூதி அரேபியாவில் பிறந்து 1989 இல் சிரியாவில் குடியேறினார். இவர் ஒசாமா தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கு எதிரான பல தாக்குதல்களில் ஈடுபட்டதுடன், ஒசாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். 


ஈராக்கை அமேரிக்கா கைப்பற்றியதையடுத்து நடைபெற்ற போரில் 2006 இல் ஈராக்கில்வைத்து அமெரிக்க படைகளினால் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தார்.  


பின்பு ஐ.எஸ் இயக்கத் தலைவர் பக்தாதியுடன் செயற்பட்டு வந்தாலும் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நட்பில் இருந்துவந்தார். பின்பு 2017 இல் HDS இயக்கத்தை ஆரம்பித்து தனியான இயக்கமாக செயற்பட்டாலும், இவருக்கு அல்-கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.     


எனவேதான் அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் பிரதான தளமாக சிரியா இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது.  


ஆட்சியை கைப்பற்றிய HDS இயக்கத்தை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களான தலிபான்கள் பாராட்டியுள்ளார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note