Breaking News

முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகுவின் வகிபாகம்.

 நான்காவது தொடர்.

மு. காங்கிரசிலிருந்து சேகுவை நீக்கமும், அதற்கான காரணமும். 


சேகுவின் தீவிர போக்கும், துணிச்சலும், பலவித ஆற்றலும் காணப்பட்டதன் காரணமாக கட்சிக்குள் பலருக்கும் அவர்மீது பொறாமை இருந்தது. தலைவரைவிட்டு எப்போது தூரப்படுத்தலாம் என்று சிந்திப்பவர்கள் இருந்தனர். சின்ன சின்ன விடையங்களையெல்லாம் பெரிதுபடுத்தி சேகுவை ஓரம்கட்டும் வேலைகள் அவ்வப்போது நடைபெற்றது.   


தலைவர் அஷ்ரபும், சேகுவும் ஒரே நேரத்தில் கலந்துகொள்கின்ற பொது மேடைகளில் சேகுவின் உணர்ச்சிபூர்வமான வசீகரிக்கின்ற நளினமான மற்றும் அக்கரைபற்றுக்கே உரித்தான பேச்சுக்கு மக்களில் அதிகமான கைதட்டல்கள் இருந்தது. இதனை தவறான கண்ணோட்டத்தில் சிலர் தலைவர் அஷ்ரபை எச்சரித்தனர்.      


அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சேகு இஸ்சதீனின் தீவிர போக்கும், அஸ்ரப்பின் நிதானமான செயற்பாடுகளும் “ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது” என்றும், “ஒரு வாகனத்துக்கு சாரதி ஒன்றுதான்” என்ற கருத்தாடலையும் உருவாக்கியது. அதாவது இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது என்ற நிலை காணப்பட்டது. 


கட்சிக்குள் சேகுவுக்கென்று ஓர் அணி உருவானது. இதனை அஸ்ரப் விரும்பவில்லை. விடுதலை புலிகளின் உப தலைவர் மாத்தையாவுக்கு பிரபாகரனினால் மரண தண்டனை வழங்கப்பட்ட அதே 1992 ம் ஆண்டு காலப்பகுதியிலேயே மு.கா தவிசாளர் சேகு இஸ்சடீன் முஸ்லிம் காங்கிரசிலிருந்து தலைவர் அஷ்ரபினால் நீக்கப்பட்டார்.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பொருத்தமற்றது என்பது அப்போது முஸ்லிம் காங்கிரசின் கொள்கையாகும். 


ஆனால் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாசா முன்பாக “மீண்டும் ஆர். பிரேமதாசாதான் இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக வரவேண்டுமென்று எனது சார்பிலும், முஸ்லிம் காங்கிரசின் சார்பிலும், முஸ்லிம் மக்கள் சார்பிலும் அல்லாஹ்வை பிராத்திக்கிறேன்” என்று தலைவர் அஷ்ரப் மேடையில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். 


அஸ்ரபின் இந்த உரை வானொலி, தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்தது. இது கட்சியின் கொள்கைக்கு முரணான கருத்து என்பதனால், “இது அஸ்ரபின் தனிப்பட்ட கருத்து” என்று சேகு பத்திரிகைக்கு அறிக்கை வெளியிட்டார். 


ஏற்கனவே பனிப்போர் இருந்த நிலையில், அது தீப்போராக மாறியது. அதாவது சேகுவின் அறிக்கை அவரை முஸ்லிம் காங்கிரசிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பமாக அமைந்தது.  


கட்சியிலிருந்து நீக்கியதானது சேகுவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சற்றும் இதனை எதிர்பார்க்கவில்லை. தனது வாழ்நாளில் கட்சிக்காக உழைத்த உழைப்புக்கள் எல்லாம் செல்லாக்காசானது. 


முஸ்லிம் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டதன் பின்பு “முஸ்லிம் கட்சி” என்ற தனித்துவ கட்சி ஊடாக தனது அரசியலை முன்னெடுத்தார். ஆனால் அப்போது எதிர்கட்சி வரிசையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுத்து வீரியமாக செயற்பட்டுக்கொண்டு இருந்ததன் காரணமாக தலைவரை குறைகாண முடியவில்லை. அதனால் அஷ்ரப் மீதான சேகுவின் குற்றச்சாட்டுக்களை மக்கள் பெரிதுபடுத்தவில்லை.   


இந்த “முஸ்லிம் கட்சி” சார்பில் அப்துல் ரசூல் என்பவர் 1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடரும்.........

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note