புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்க வேண்டும். மௌலவி பீ.ஏ.எஸ். சுப்யான் வேண்டுகோள்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்க வேண்டும் என மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் பிரதி தலைவர் மௌலவி பீ.ஏ.எஸ். சுப்யான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் புத்தளமாகும். இலங்கையின் உப்பு உற்பத்தியில் 45% இற்கும் அதிகமான உப்பு புத்தளத்திலேயே உற்பத்தியாகி வருகின்றது. புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கல்பிட்டி ,வனாத்தவில்லு மற்றும் முந்தல் பிரதேச செயலகப் பகுதிகளில் 4000 ஹெக்டேயர் பரப்பளவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை இத்தொழில் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 20000 விட அதிகமானதாகும். இவ்வாறான ஒரு நிலையில் புத்தளத்தில் தொடர் மழை, வெள்ளம் காரணமாக உப்பு உற்பத்தி தொழில் நஷ்டம் அடைந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் . இதனால் தொடர்ச்சியாக உப்பு உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதில் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.. இதனால் இலங்கையில் உப்பு நுகர்வோரின் 46 மெட்ரிக் டோன் உப்பு உற்பத்தி புத்தளத்திலிருந்தே செய்யப்படுவதாக புத்தளம் உப்பு நிறுவனத்தின் தகவலின்படி அறியக்கூடியதாக உள்ளது.
நாடளாவிய ரீதியில் பலவிதத்தில் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசாங்கம் உப்பு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் அறிந்து அவர்களுக்குரிய நஷ்டத்தை ஈடு செய்வதற்கும், நஷ்ட ஈடுகளையும் வழங்குவதுடன் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் நிவாரணங்கள் வழங்க முன்வர வேண்டுமென மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் பிரதி தலைவர் மௌலவி பீ.ஏ. சுப்யான் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments