முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகுவின் வகிபாகம்.
கட்டுரை தொடர்........
தலைவர்கள் உயிருடன் வாழும்போது அவர்களது கொள்கைகளையும், சாதனைகளையும், பெறுமதியையும் எல்லோரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் மரணித்தபின்பு ஒப்பாரி வைத்து பழைய புராணங்களை புரட்டுவது வழமை.
அந்தவகையில் எம்.எச். சேகு இஸ்சடீன் உயிருடன் வாழும்போது அவர் பற்றி நாங்கள் அதிகம் பேசவில்லை. அதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கலாம். முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகு இஸடீனின் வகிபாகம் பிரதானமானது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை ஸ்தாபித்து கட்டியமைத்ததில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபை பற்றித்தான் எல்லோரும் அறிந்துள்ளனர். ஆனால் சேகு இஸ்சடீனின் பங்களிப்புக்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.
ஒரு கணவனின் வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி இருப்பதை போன்று அஷ்ரப்பின் வெற்றிக்கு பின்னால் சேகு இருந்தார். அதாவது அஷ்ரப் ஒரு பிரகாசிக்கின்ற முகமாகவும் சேகு அதன் மூளையாகவும் அப்போது பேசப்பட்டது.
இலங்கை முஸ்லிம்கள் தேசிய கட்சிகளின் முகவர்கள் மூலமாக அபிவிருத்தி அரசியலில் மூழ்கியிருந்த காலம் அது. அப்போது தனித்துவ உரிமை அரசியல் பக்கமாக மக்களை திசை திருப்புவதற்காக நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அத்தனை முஸ்லிம் கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து அல்லது மக்களை மூளச்சலவை செய்து முஸ்லிம் காங்கிரசை கட்டியமைப்பதில் அஷ்ரபுக்கு எவ்வாறு பங்குள்ளதோ, அதே பங்கு சேகு இஸ்சடீனுக்கும் உள்ளது.
முற்போக்கு சிந்தனையுள்ள சேகு அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். அதாவது வடகிழக்கில் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு சமமாக முஸ்லிம்களுக்கும் ஆட்சி அதிகாரம் வழங்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை பிரகடம் செய்தார்.
1956 இல் திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் நான்காவது தேசிய மாநாட்டு பிரகடனம், 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட “இணைக்கப்பட்ட வடகிழக்கில் தமிழர்களுக்கு வழங்கப்படுவது போன்று முஸ்லிம்களுக்கும் ஓர் தனியான சுய ஆட்சி வழங்கப்படல் வேண்டும்” என்ற பிரகடனத்தை சேகு அவர்கள் அடிக்கடி நினைவுபடுத்தினார்.
மக்களை கவரக்கூடிய அவரது வசீகரிக்கும் நளினமான பேச்சுக்கள் முஸ்லிம் காங்கிரசை கட்டியமைத்து செயலுருவம் வழங்கியது மட்டுமல்லாது அப்போது முஸ்லிம் மக்களை அரசியல் மயப்படுத்தச்செய்தது.
அத்துடன் கட்சிக்கு கொள்கை வகுப்பதிலிருந்து அதன் யாப்பினை வரைவது வரைக்கும் சேகுவின் பங்களிப்பு பிரதானமானது.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
குறிப்பு: கட்டுரை நீண்டுகொண்டு சென்றால் நீங்கள் வாசிக்கமாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்ப குறிப்பிட வேண்டிய முக்கிய விடயங்களை கூறாமல் இருக்க முடியாது. அதனாலேயே இந்த கட்டுரை தொடரினை முடியுமானவரை சுருக்குமான பதிவு செய்கிறேன்.
No comments