Breaking News

தேசியப் பட்டியல் எம்பி யாருக்கு ? அதனால் எதனை சாதிக்க முடியும் ? ஓர் வரலாற்றுப் படிப்பினை.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. எம்பி பதவி மூலமாக மக்களுக்கு சேவை செய்யப்போவதாக அனைவரும் கூறுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு எவ்வாறான சேவைகளை செய்ய முடியுமென்று தெரியவில்லை. 


எனக்கு எம்பி பதவியை தாருங்கள் என்பதற்கு பதிலாக ஊருக்கு எம்பி வேண்டுமென்று பிரதேசவாதங்களை தூண்டுபவர்கள் சற்று வரலாற்றினை புரட்டிப் பார்க்க வேண்டும். 


ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழ் இயக்கங்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்தாலும், வே. பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் இயக்கம் விடுதலை புலிகளுக்கு சார்பாக செயற்பட்டது.


1989 இல் நடைபெற்ற பொது தேர்தலில் ஈரோஸ் இயக்கம் சுயேற்சை குழுவாக போட்டியிட்டு புலிகளின் அனுசரனையினால் அதிகமான பாராளுமன்ற ஆசனங்களை அது வெற்றி கொண்டது.    


1990 இல் பிரேமதாசா – விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததன் பின்பு பிரபாகரனின் வேண்டுகோளுக்கு அமைவாக ஈரோஸ் இயக்கம் விடுதலை புலிகள் அமைப்பில் சங்கமமானதுடன், ஈரோஸ் அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் தலைவர் வே. பாலகுமாரன் அறிவித்திருந்தார்.  


பின்பு, பாராளுமன்ற செயற்பாடுகளினால் தமிழர்களின் உரிமைகளை பெற முடியாது என்று தெரிவித்த ஈரோஸ் இயக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் (10) பேர்கள் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு புலிகளுடன் போராட்டத்தில் பங்குகொள்வதற்காக காட்டுக்குள் சென்றனர். 


இவர்களை வளைத்துப் போடுவதற்கு பிரேமதாசா கடுமையாக முயற்சித்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. 


இந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருந்தால் பிரேமதாசா அரசுடன் இணைந்து ஏராளமான சலுகைகளையும், சொகுசான வாழ்வினையும் அனுபவித்து தனது  பரம்பரைக்கு சொத்துக்களை குவித்திருக்கலாம். ஆனால் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தனர் என்பது எமக்கு வரலாற்று படிப்பினையாகும். 


ஆனால் இன்று என்ன நடக்கின்றது ? ஒரு எம்பி பதவிக்காக எத்தனையோ சூழ்சிகள், தந்திரங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுப்புக்கள், ஏமாற்றுக்கள், வெட்டுக்குத்துக்கள், கட்சித் தாவல்கள், மனிதாபிமானம் இல்லாத செயற்பாடுகள் என்று பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது.


எம்பி பதவி என்பது ஒரு சமூகத்தின் இலக்கு அல்ல, அதன் மூலம் எமது சமூகம் எதையும் சாதித்ததாக தெரியவில்லை. எனவே இந்த பதவிகளுக்காக நாங்கள் ஒருபோதும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note