Breaking News

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் சேர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)

அல்லாஹ்வின் பேரருளும் மன்னிப்பும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அதேவேளை எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். கடந்த காலங்கள் போலல்லாது அறிவு ஜீவிகள் பலரும் துறைசார் நிபுணர்களும் தெரிவாகியுள்ள பாராளுமன்றத்திற்கு நீங்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அல்ஹம்து லில்லாஹ்


அல்லாஹ்வின் உதவியும் உங்களது கடுமையான உழைப்பும் புத்தளம் மாவட்டம் தனது வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு அடைவை பெற்றிருக்கிறது.  விகிதாசார தேர்தல் முறையொன்றினூடாக பெரும்பான்மை கட்சியொன்றில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்திலிருந்து பாராளுமன்றம் செல்கின்ற முதலாவது உறுப்பினர் என்ற சாதனை சாதாரணமானதல்ல; வரலாற்று புகழ்மிக்கது. அல்ஹம்து லில்லாஹ். இதற்கு முன் பல அரசியல் ஜாம்பவான்களால் கூட இவ்வடைவை ஈட்ட முடியாமல் போன கவலையான செய்திகள்தான் இருக்கின்றன.


இங்குதான் உங்களைப் போன்ற ஒருவரது பொறுப்பு மிகவும் கனதியானது. "நான் பகலில் உறங்கினால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிழைத்து விடுவேன்; இரவில் உறங்கினால் அல்லாஹ்விற்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் தவறிழைத்து விடுவேன்" என்ற கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது கருத்தை பரஸ்பரம் நினைவூட்டிக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும். "சமூகத்தின் தலைவன் அச்சமூகத்தின் தொண்டன், பணியாளன்" என்ற எங்கள் தலைவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸ் பொறுப்பை சுமந்து வாழ்ந்த எமது கலீபாக்களது வழிகாட்டல் தத்துவமாக (Guiding Principal) இருந்திருப்பதை வரலாறு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.


பொறுப்புக்களை தூய உள்ளத்துடன் சுமந்தவர்கள் குறித்த பொறுப்பு சார்ந்த தகைமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். எனவே, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியவர்கள் அது தொடர்பான அறிவை, திறனை, ஆளுமைப் பண்பை மேலும் வளர்த்துக் கொள்ளவதில் கூடிய கவனம் அவசியப்படும்; பாராளுமன்ற ஒழுங்குகளை, கட்டமைப்பை, தேச, சமூக விவகாரங்களை கையாள்வதற்கான பாராளுமன்ற ஏற்பாடுகளை இன்னும் ஆழமாக கற்றுக் கொள்வதும் விளங்கிக் கொள்வதும் முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கமாட்டாது.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசத்தின் நலனிலும் தேச மக்களின் நல் வாழ்விலும்  அக்கறையுள்ளவராகவும் ஒடுக்கப்பட்ட, குரலற்றவர்களின் குரலாகவும் தேசத்தின் மதிப்பிற்கரிய காடுகளினதும் எண்ணிலடங்கா உயிரினங்களினதும் நீர் வளத்தினதும் ஏனைய வளங்களினதும் காவலர்களில் ஒருவராகவும் செயற்படுவதன் மூலம்தான் குடிமக்களின் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியும். இது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டுமென்பதல்ல. இந்தத் தேர்தல் முடிவு கற்றுத் தந்த பாடங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று.


இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதியாகவும் இருக்கின்ற அங்கத்தவரது பொறுப்பு பாரமானது; சங்கடங்கள் பலவற்றால் சூழப்பட்டது; சவால்கள் நிறைந்தது. அத்தகைய ஒருவர்  பெரும்பான்மை சமூகத்தினதும் சிறுபான்மை சமூகங்களினதும் பிணைப்புப் பாலமாக  இயங்க வேண்டும். இந்த தேசத்தில் சிறுபான்மை சமூகங்கள் தங்களது உரிமைகளை பெற்று நம்பிக்கையோடு வாழுகின்ற நிலையை கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. அவர்களை தேசத்தின் பங்காளர்களாக மாற்றுவதற்குரிய வியூகங்கள் வகுத்து செயற்படுவது திறன்மிக்கது. நாடு எமக்குத் தரவேண்டிய உரிமைகளை விட நாம் இந்நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முக்கியத்துவம் வாய்ந்தன என்ற மனோநிலையை சிறுபான்மை சமூகங்களில் ஏற்படுத்த சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளோடு இணைந்து உழைப்பது தலையாய பொறுப்பாகும். எமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் உரிமைகளை பெற முடியும் என்ற நம்பிக்கையை சிறுபான்மை சமூகங்களின் உள்ளங்களில் பதிக்க அசுர உழைப்பு அவசியப்படுகிறது .


மற்றுமொரு பக்கத்தையும் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.  கடந்து வந்த காலங்களில் இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி முதற்கொண்டு அனைவரும் தத்தமது பிரதேசங்களிற்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கினார்கள் என்ற அவதானம் உள்ளது. என்றபோதும் அந்த மனோபாவத்திலிருந்து விலகி புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதி என்ற பார்வை மேலோங்கி இருக்க வேண்டும். புத்தளம் மாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் விவகாரங்களில் கரிசனையுள்ளவராக; அவர்களது தேவைகளை இனம் கண்டு நிறைவேற்றுபவராக; பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருபவராக இந்த சமூகம் உங்களை காண்கிறது. புத்தளம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கலாசாரம் தொழில்நுட்பம் போன்ற இன்னோரன்ன துறைகளில் நிலையான அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக வழிகாட்டல்கள், உரிய ஆலோசனைகளை பெற்று வினைத்திறனும் விளைதிறனும் ஏற்படுத்துபவரை அறிவுலகம் என்றும் வரவேற்கும்.


பாராளுமன்றத்தின் காலம் ஐந்து ஆண்டுகள் என்பதால் புத்தளம் மாவட்டத்திற்கான தனித்துவமான ஐந்தாண்டுத்திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுவது மிகவும் பொருத்தமானதாக அமையும் என நீங்கள் சிந்தித்திருப்பீர்கள். புத்தளம் மாவட்டத்தில் வாழுகின்ற சிங்களம், தமிழ், முஸ்லிம் பல்லின சமூகங்கள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவமாக  அடையாளப்படுத்துவதன் மூலம் வீரியமிக்கதொரு அரசியல் பயணத்தை தொடரும் சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன என்பது துலாம்பரம். 


மேலும்,  முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதி  ஒருபோதும் மறந்து விட முடியாத கடப்பாடொன்றை நினைவூட்டிக்கொள்வது விரும்பத்தக்கது. ஒரு முஸ்லிமின் தனித்துவமான அடையாளங்களை பாதுகாப்பதில் கவனமும் மறுமை ஈடேற்றத்திற்கான வழிகளுள் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளும் ஒரு விசுவாசியாக செயற்படுவதும் அவசியமாகும். அவர் பெறுகின்ற நற்பெயர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கின்ற நற்பெயர்; அவர் தேடிக் கொள்கின்ற அவப்பெயர் முழு முஸ்லிம் சமூகத்தையும் தலை குனிய வைக்கும் என்பது தெளிவான உண்மையாகும். அறிஞர் எம்.சீ சித்தி லெப்பை, T.B  ஜாயா, சேர் ராசிக் பரீத், எச்.எஸ் இஸ்மாயில், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் போன்ற இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றின் முன்னோடிகளை முன்னுதாரணப் புருஷர்களாக எடுத்துக் கொள்வதன் மூலம் வரலாற்றில் அழியா தடத்தை பதித்துக் கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்.


எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது  ஆயுளிலும் ஆரோக்கியத்திலும் பரக்கத் செய்து உங்கள் பணிகளை அங்கீகரித்து மீஸானுல் ஹஸனாத்தில் கனமானதாக ஆக்கியருள்வானாக.





No comments

note