Breaking News

காலஞ்சென்ற நீதவான் இக்பால் அவர்கள் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடியவர். புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க தலைவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் பொதுக்குழுத் தலைவரும்,  புத்தளம் மாவட்ட பதில் நீதவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான காலஞ்சென்ற எம். இக்பால், புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடியவர் என  புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க தலைவரும், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதியுதீன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.


தனது அனுதாப செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


1989 - 1990ம் ஆண்டு கால பகுதிகளில் அரசாங்கம் மேற்கொண்ட உப்பு சந்தைப்படுத்தல் தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைகளின் போது புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து டாக்டர் ஐ.எம்.இல்யாஸின் முயற்சியின் விளைவாக முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர்,  ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்  நீதிமன்றம் சென்றார். 


அவ்வேளை அவருக்கு பக்க பலமாக நின்று இந்தப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு மர்ஹூம் இக்பால் அவர்கள் காரணகர்த்தாவாக விளங்கினார். 


வரலாற்று சிறப்புமிக்க அந்தப் போராட்டம் புத்தளம் மக்களின் பொருளாதார மேம்பாட்டில் ஒரு மைல்கல் நிகழ்வு என்றால் அது மிகையாகாது. 


அது மாத்திரமன்றி புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் தொடரான அக்கறை கொண்டிருந்தவர் மர்ஹூம் இக்பால் அவர்கள். 


அதன் ஒரு அங்கமாகவே பொதுக் குழுவின் தலைவராக தனது பங்களிப்பை தான் மரணிக்கும் வரைக்கும் சங்கத்துக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பிழைகளை பொருத்து, சமூகத்துக்கும் சங்கத்துக்கும் அவர் ஆற்றிய அரும் சேவைகளை பொருந்திக்கொண்டு அவரது மறுமைப் பாக்கியங்களை நிறைவாக வழங்குவானாக. 


உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க நிர்வாகக் குழு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏனைய நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் சங்கத்தின் ஊழியர்கள் சார்பாக இந்த அனுதாப செய்தியை தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.





No comments

note