பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொண்டு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்கு - ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்தது போன்றே எதிர்காலத்தில் அவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடாத வகையில் சுபீட்சமான நாடு ஒன்றைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும் என்று வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேல் மாகாணத்தின் 33 உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த, தற்காலிக, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றிய சுமார் 800 க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (08) நாத்தாண்டிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்,
21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப எமது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மாற்றமடைய வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் வரி அறவிடல், பாதைகள் பராமரித்தல் உள்ளிட்ட வழக்கமான செயற்பாடுகளுக்கு அப்பால் அந்தந்தப் பிரதேசங்களில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பட்ச பலனைப் பெறவும், அதனைக்கொண்டு வருமானம் ஈட்டிக் கொள்வதற்குமான வழிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் டெக்னோலொஜி எனும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்பாடுகளை இலகுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டை நவீன சவால்களைச் சமாளிக்கும் வகையில் மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக இனியொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் நாட்டை சுபீட்சமாக மாற்றி, நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதனை அடியொற்றி வடமேல் மாகாணத்தை தொழில் நுட்பம், சுகாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட மாகாணமாக மாற்றி அமைப்பது எங்கள் இலக்காகும்.
அதனை மனதில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களும் தங்கள் கடமைகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன , உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நகர அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களான அமல் சிந்தக மாயாதுன்னே, சமன்பிரியஹேரத், யதாமினி குணவர்த்தன, அலி சப்ரி ரஹீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments