Breaking News

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு; புதிய ஆளுநர் நசீர் அஹ்மட் அதிரடி...!

 ரஸீன் ரஸ்மின்

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கையை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.


வடமேல் மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நசீர் அஹ்மட், மல்வத்து பிரிவு அனுநாயக்க விக்ரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் அதி வண. நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மஹா விகார பிரிவு மஹாநாயக்க தேரர் வரகாஹொட ஞானரத்ன தேரர் ஆகியோரை நேற்று (13) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இதன்போது, இரண்டு பௌத்த மதத் தலைவர்களும் புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.


வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட தங்களின் சிந்தனை போக்கின்படி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு உங்களால் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.


மேலும், வடமேல் மாகாணத்தில் தற்பொழுது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் நசீர் அஹ்மட் இங்கு குறிப்பிட்டார்.


இதன்மூலம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலும் , பிரிவினாக்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.


அத்துடன், வடமேல் மாகாணத்தின் சுற்றுலா வர்த்தகம் நூற்றுக்கு இரண்டு வீதமாக உள்ளதாகவும் , அதனை மேம்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு விசேட வேலைத்திட்டமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி ஊடாக பிரதேசத்தின் சுற்றுலா வர்த்தகத்தை முன்னேற்றி வடமேல் மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.







No comments

note