புத்தளம் - நாவற்காடு பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் பாடத்துக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு
(எம்.யூ.எம்.சனூன்,எம்.எச்.எம்.சியாஜ்)
இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் கிராமப்புறப் பாடசாலைகளான நரக்களி, மாம்புரி, நாவற்காடு, தேத்தாப்பளை மற்றும் நாயக்கர் சேனை பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட தமிழ் பாடத்துக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு அண்மையில் நாவற்காடு பாடசாலையில் இடம்பெற்றது.
கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.எம்.ஆர்.டீ. பர்ணாந்து அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த இலவச செயலமர்வில் கல்பிட்டி கோட்ட தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி றிஸ்மியா பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
இதேவேளை கல்பிட்டி கோட்ட விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.சாஹிர் மற்றும் தேத்தாப்பளை பாடசாலை விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.கியாஸ் ஆகியோர் இணைந்து இலவசமாக விஞ்ஞான பாட செயலமர்வை நரக்களி பாடசாலையில் நடாத்தினர்.
அடுத்து வரலாறு பாடத்துக்கான செயலமர்வு புத்தளம் ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் எம். றியாஸ் அவர்களால் நரக்களி பாடசாலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
புத்தளம் தமிழ் அதிபர்கள் சங்கம் இம்மாணவர்களுக்கு கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில பாட மாதிரி வினாத்தாள்களை மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்து வழங்கியது.
ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அதிபர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும், வளப்பற்றாக்குறைகள் நிலவும் இப்பாடசாலைகளுக்கு இவ்வாறான செயலமர்வுகள் அரிய வாய்ப்பு எனவும் மாம்புரி ரோமன் கத்தோலிக்க சிங்கள தமிழ் மகா வித்தியாலய பிரதி அதிபர் மெரிய லாவுஸ் மேர்ஸி தெரிவித்தார்.
No comments