இப்ராஹீம் ஹஸ்ரத் காலமானார்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கொழும்பு கோட்டை ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 29 ம் திகதி இரவு ஏ.எல்.எம் இப்ராஹீம் ஹஸ்ரத் காலமானார் .
உயன்வத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், சுமார் 60 வருட இஸ்லாமியப் பணியின் அடையாளம். கபூரிய்யாவிலிருந்து வெளியாகிய காலம் முதல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியோடு இணைந்து இறை பணிக்காய் தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த அமைதியான சாதனையாளர்.
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகச் செயற்பட்ட அவர், 1973ல் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்ட போது அதன் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பிரதான உறுப்பினராகத் தொழிற் பட்டவர்.
1976/77 மற்றும் 1982-1994 வரை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக இயக்கத்தை வழிநடத்திய அவர் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்.
மாதம்பை மற்றும் புத்தளம் இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரிகள், ஓட்டமாவடி பாத்திமதுஸ் ஸஹ்ரா, மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா, சிங்கள மொழி மூலமான முதலாவது ஷரீஆ நிறுவனமான திஹாரி தன்வீர் அகடமி ஆகியவை உருவாகக் காரணமானவர்.
அல்குர்ஆன் விளக்கவுரை - தர்ஜுமானுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பணியின் உயிர்நாடியாய் செயற்பட்டவர்.
ஜமாஅத்தின் தலைமையகத்தில் எப்போதும் இரண்டு மூன்று நபர்களோடு தன் அறையில் பகல் இரண்டு மணியிலிருந்து இஷா வரை இப்பணிக்கென்றே அவர் நேரம் ஒதுக்கி சில வருடங்கள் இயங்கியதைக் கண்டிருக்கிறோம்.
ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செரண்டிப் நிறுவனம் அவர் இயங்கிய மற்றொரு களம்.
அல்குர்ஆனை ஓதுவோம், விளங்குவோம், அதன் வழி நடப்போம் என்ற செய்தியை நாட்டில் கொண்டு சென்ற தஃவதுல் குர்ஆன் செயற்பாட்டின் முன்னோடி அவர்.
அவர் எப்போதும், சமூகத்திற்காய் பணி செய்கின்ற போது பிரதியுபகாரம் பாராதவர். இருக்கின்ற சிறிய வளத்தைக் கொண்டும் செய்ய வேண்டிய பெரும் பணியை ஆரம்பித்தவர். அதற்கு ஒத்துழைக்கின்றவர் யாராக இருப்பினும் அவர்களை அரவணைத்து, தன்னோடு சேர்த்து பயணித்தவர். அவரது தஃவா வாழ்வில் நாம் படிக்க வேண்டிய நல்ல முன்மாதிரிகளில் சில அவை.
அல்லாஹுத்தஆலா அவரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக. மேலான சுவனத்தை அவரது தங்குமிடமாக ஆக்கியருள்வானாக.
No comments