Breaking News

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நூருல் ஹுதா உமர் 

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தைக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. 


அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்னறலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


2016ம் ஆண்டைய அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்குதல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், 2024 பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டு ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் அக்கொடுப்பனவு பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்க கோரல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், திறந்த விளம்பரத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையினை உடனடியாக செயற்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது. 


பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி சுமார் ஒரு மணிநேரம் இது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments

note