Breaking News

கணமூலை - லத்தீப் மாவத்தை அல் அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்தின் பரிசளிப்பு நிகழ்வு

 ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கணமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்தின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (31) கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்தின் பொறுப்பாளர் எஸ் .ரலீபா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீல், உதவி முகாமையாளர் சுஜீவா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கிங்ஸ்லி டேவிட், கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் பி.எம்.முஸ்னி, கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பைசர் மரிக்கார், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அஸ்ரின் அலாவுதீன் , கிராம உத்தியோகத்தர் அமீனா, அபிவிருத்தி உத்தியோகத்தர் அனூசியா, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஏ.எம்.எம்.மகீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எச்.எம்.ரபீக்,  எஸ்.கீர்த்தி லதா, முஹம்மது சமீம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது, ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், சிறுவர் கழகத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.


மேலும், லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்தின் உறுப்பினர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய வகையில் கையெழுத்தினால் தயாரிக்கப்பட்ட சமுர்த்தி சிறுவர் மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டன.


மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீல், கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் பி.எம்.முஸ்னி மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அஸ்ரின் அலாவுதீன் ஆகியோர் இணைந்து குறித்த சிறுவர் மலரை வெளியிட்டு வைத்தனர்.


அத்துடன், கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் பி.எம்.முஸ்னி நூல் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்தினார்.


சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புத் திறன் மற்றும் தேடல் என்பனவற்றை ஊக்கப்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் மலர் வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாக காணப்படுவதுடன், இந்த சிறுவர் மலர் இடைநடுவில் நினலறுவிடாது தொடராக வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.


குறித்த சமுர்த்தி சிறுவர் மலரானது கணமூலை சமுர்த்தி சிறுவர் சங்கம் மற்றும் லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சிறுவர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவர்களின் ஆக்கங்களுடன் கணமூலை தெற்கு கிராமத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு இதழாக வெளிவரவுள்ளது.


இதன்போது, லதீப் மாவத்தை அல்அக்‌ஷா சமுர்த்தி சிறுவர் சங்கத்திலுள்ள சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











No comments

note