Breaking News

34 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் அதிபர் எம்.எச்.எம். ராசிக். - ஏ.எச். பௌசுல் ஆசிரியர்

புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம். ராசிக் அவர்கள் 34 வருட அரச சேவையிலிருந்து இன்று 27.10.2023  தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகிறார்.


மொஹமட் ஹனிபா மொஹமட் ராசிக் அவர்கள் 01.09.1989 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞானம், சமூகக்கல்வி பாட ஆசிரியராக இணைந்து கொண்டார்.  சுமார் இரண்டரை வருடம் சிறப்பாக சேவையாற்றிய அவர் 1992.02..10 ஆம் திகதி கல்/ அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு மீண்டும் அப்பாடசாலையில் 1997.06.17 வரை  சேவையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து  பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 1997.06.17 ஆம் திகதி இடமாற்றம் பெற்று  நான்கு வருடங்கள் சிறந்த ஒரு ஆசிரியராக கடமை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 2001.08.06 ஆம் திகதி பு/பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தில் ஓர் இளம் அதிபராக பதவியை பொறுப்பேற்று அப்பாடசாலை ஏழு வருடம் சிறப்பாக வழிநடத்தி வீறுநடை போட வைத்தார். இவரின் இவ்வாறான திறமையைக் கண்ட வடமேல் மாகாண கல்வி அமைச்சு 2005 ஆம் ஆண்டு மாகாணத்துக்கான சிறந்த அதிபர் விருதினையும், 2006 ஆம் ஆண்டு சிறந்த அதிபருக்கான தேசிய (ஜனாதிபதி) விருதையும் வழங்கி கௌரவித்தது.


2007.06.11 ஆம் திகதி தனது சொந்த ஊரான  பு/ அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் பொறுப்பை ஏற்று அப்பாடசாலையை சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும் போது 2009.06.22 ஆம் திகதி இடமாற்றம் பெற்று  பு/ விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடமையை ' .  இவ்வேளையில்  2010.02.03 ஆம் திகதி  அதிபர் போட்டிப் பரீட்சையின் போது அதிபர் தரம் SLPS2 தரத்தைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.


2011.06.30 ஆம் திகதி விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து வலயக் கல்விப் பணி மனை, ஊர் பிரமுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  பு/ சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்பாடசாலையில் கானப்பட்ட பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து அக்கல்லூரி வீறுநடை போடுவதற்கு தனது பங்களிப்பை வழங்கினார்.   இக்காலத்தில் வடமேல் மாகாண கல்வி அமைச்சு சிறந்த அதிபருக்கான விருதை தனதாக்கிக் கொண்ட அவர்   "கலைப் பொழில்" விருதையும் பெற்றுக் கொண்டார்.


2013.12.24 ஆம் திகதி புத்தளம் வலயக் கல்விப் பணி மனைக்கும் தனது சேவையை வழங்க வேண்டும்  என்பதற்காக   பாட இணைப்பாளராக கடமையாற்றினார்.   இக்காலத்தில்  சிறந்த முகாமையாளருக்கான (Srilanka Unaits)  விருதையும் பெற தவரவில்லை.


2014.10.10 ஆம் திகதி பு/மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட அன்னார் பல மாற்றங்களைச் செய்து அப்பாடசாலையை வெற்றி நடைக்கு இட்டுச் செல்ல உறுதுணையாக இருந்தார்.2016.02.03 ஆம் திகதி அதிபர் போட்டிப் பரீட்சையில்  அதிபர் தரம் SLPS 1 அதிபர் தரம் 1 ஐ பெற்றுக் கொண்ட அவர்  2018.04.05 ஆம் திகதி பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வெற்றிடமான  அதிபர் பதவியை  பொறுப்பேற்று அப்பாடசாலையை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும், கல்வி வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்புச் செய்தார்.   இக்காலத்தில்  அவரை கௌரவிப்பதற்காக அவரின் சேவைக்குக் கிடைத்த சன்மானங்களாக "தேச கீர்த்தி" விருதையும் (2019), C.W.W. கண்ணங்கரா விருதையும் (2021) பெற்றுக் கொண்டது கோடிற்று காட்ட வேண்டியது ஒன்றாகும்.


2023.01.02 ஆம் திகதி  தான் கடமையாற்றிய   முதல் பாடசாலையான பு/ அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  இறுதி சந்தர்ப்பமாக சேவையாற்ற   மீண்டும் இணைந்து கொண்ட அவர்  இன்றுடன்  2023.10.27  தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகிறார்.


34 வருட கல்விச்  சேவையில் இரவு, பகல் பாராது  ஆசிரியராக, அதிபராக, பாட இணைப்பாளராக சேவையாற்றிய அவர் கல்விப் புலத்தில் மாத்திரமன்றி பல்வேறு சமூகப் பொறுப்புக்களை வகித்து பல்வேறு உயர் விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


இவரின் இவ்வோய்வு இப்பிராந்தியத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பாகும். இவரது சேவையை அல்லாஹ்தஆலா பொறுந்திக் கொள்வதோடு இவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் என வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி 

(தேசிய பாடசாலை)





No comments