Breaking News

மக்களின் மனங்களை வென்றவர் மறைந்த மயோன் முஸ்தபா - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம் -

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சரும், தொழிலதிபருமான மயோன் முஸ்தபா பலதரப்பட்ட மக்களினதும் மனங்களை வென்றவர் என அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

மயோன் குழுமத்தின் ஸ்தாபகராக இருந்ததோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியலில் பிரவேசித்த மர்ஹூம் எம்.எம்.எம்.முஸ்தபா, 1994 ஆம் ஆண்டு அம்பாறை (திகாமடுல்ல)மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளர் ஒருவராகப் போட்டியிட்டார்.

அத்துடன், மறைந்த எமது ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்சியின் தேசிய அமைப்பாளராக அவரை நியமித்து கண்ணியப்படுத்தியிருந்தார்.

 காலப்போக்கில், வெவ்வேறு அரசியல் முகாம்களில் அவரும் நாங்களும் இருக்க நேர்ந்த போதிலும் கூட,  சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்கள் மட்டுமல்லாது, கிழக்கிலங்கையினதும், நாட்டினதும் பல்வேறு பிரதேசங்களும் அவரது பரந்துபட்ட பணிகளால் அதிகம் பயனடைந்திருக்கின்றன.

முன்னாள் கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, ஒரு கனவானாகத்  திகழ்ந்து, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் அளப்பரிய பங்களிப்புகளைச் செய்த மர்ஹூம் எம்.சி.அஹமதுவின் மருமகனான முஸ்தபா, தனது கனிவான பேச்சினாலும், உதவுகின்ற உள்ளத்தினாலும் மக்கள் மத்தியில் மங்காத புகழோடு வாழ்ந்து, மறைந்து மறக்க முடியாத ஓர் ஆளுமையாக இடம் பிடித்துள்ளார் .

அநேக சேவைகளைச் செய்துள்ள மயோன்  முஸ்தபா குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், கணணிக் கல்வியை ஊக்குவிப்பதிலும் முன்னிலையில் திகழ்ந்தார்.

 அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவன பாக்கியத்தை வழங்குவானாக.  அன்னாரின் மறைவினால் துய ருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.




No comments

note